ரோடு

ரோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் கொரோனா பரவலால் மூடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஈரோடு அடுத்த வெள்ளோட்டில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது.  இது முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இங்குப் பறவைகளுக்கான சீசன் காலமாகும்.

இக்காலகட்டத்தில் பெலிகான், கொசு உள்ளான், வண்ணான் நாரை, கூழை கெடா, பெரிய நீர்க்காகம், சிறிய நீர்காகம், பாம்புத் தாரா, சாம்பல் நாரை, வெண் மார்பு மீன்கொத்தி பறவை, ஜெம்புகோரி உள்ளிட்ட பல்வேறு பறவைகள் சரணாலயத்திற்கு வந்து செல்கின்றன.

இவற்றில், கூழை கெடா ரக பறவை ஆஸ்திரேலியாவில் இருந்தும், கொசு உள்ளான் பறவை சைபீரியா நாட்டில் இருந்தும் வருகிறது.  தவிர இலங்கை, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பறவை இனங்கள் ஆண்டுதோறும் வந்து செல்கின்றன.

பறவைகளைக் காண்பதற்காக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடு பயணிகளும் அதிகளவில் வந்து செல்வார்கள். இங்கு தினந்தோறும் காலை முதல் மாலை வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும்.

கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டு வருகின்றன.

வெள்ளோடு பறவைகள் சரணாலயமும் மூடப்பட்டு, நேற்று முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த தகவல் சரணாலயம் முன்பு அறிவிப்புப் பலகையாக வனத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.