சென்னை; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஏற்கனவே இதுபோன்ற வழக்கை நேற்று நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இன்று தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்துள்ளது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அங்கு நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. 77பேர் களத்தில் இருந்தாலும், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி, திமுக அமைச்சர்கள் குழு அங்கு முகாமிட்டு பணியாற்றி வருகிறது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எடப்பாடி தரப்பினரும், பாஜகவினரும் வாக்கு வேட்டையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ள நிலையிலும், வாக்களர்களுக்கு பணபட்டுவாடா செய்வது தொடர்வதாகவும், இதனை தடுக்க தேர்தல் ஆணையம் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார். ஒவ்வொரு தேர்தலின் போதும், பணம் கொடுத்து வாக்கு வாங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், தவறிழைப்பவர்கள் தண்டிக்கப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார்.
தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட மனு மீது எந்த பதிலும் அளிக்கப்படவில்லை எனவும், தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வெளிமாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டுமெனவும், அதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
இன்று இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ஏற்கனவே மற்றொரு வழக்கில் இது சம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.