சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. அதன்படி காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத்தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இன்னும் அறிவிக்கப் படவில்லை. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு காரணமாக, வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலை உள்ளது. அதே வேளையில், அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களமிறங்கி உள்ளன. இதனால், அங்கு 5முனை போட்டி நிலவி விருகிறது.
இந்த பரபரப்பான சூழலில், இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இன்று முதல் பிப்ரவரி 7-ந்தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். காலை 11மணி முதல் மாலை 3மணி வரை மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்ய அனுமதி. 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை தவிர்த்து தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிவரை வேட்பு மனுக்களை மாநகராட்சி கமிஷனரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சிவக்குமாரிடம் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.