ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும்பணி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில் எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிபெறுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2021 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஓதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால், 2023 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதே ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரும் பெரியாரின் பேரனும் ஆகிய ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். இந்த நிலையில் அவரும் கடந்த ஆண்டு இறுதியில் காலமானதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இரண்டாவது முறையாக பிப்ரவரி 5ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 67.97 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகறது.
இந்த இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 46 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டனர். வாக்குப்பதிவுக்கா, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகள் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய 33 வார்டுகளுக்குட்பட்ட 53 வாக்குப்பதிவு மையங்களில் மொத்தம் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 852 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 1,194 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியை மேற்கொண்டனர். துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் 2,678 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 128 ஆண் வாக்காளர்களும், ஓரு லட்சத்து 17 ஆயிரத்து 381 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. மொத்தம் உள்ள 2,27,546 வாக்காளர்களில் 1,54,657 வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, சீல்வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டன. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்புடன் அவை வைக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. . வாக்கு எண்ணிக்கையை 17 சுற்றுகளாக எண்ணுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக 54 மேசைகள் போடப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 51 அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன்பிறகு மின்னனு வாக்குப்பதிவு இயந்திர வாக்குகள் எண்ணப்படும்.
வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து காலை 11மணி அளவில் முன்னணி நிலவரம் தெரிய வரும் என்றாலும், திமுக வேட்பாளர் சந்திரகுமார் எத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லப்போகிறார் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.