ஈரோடு: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சி போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருவதுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் செய்யும் பணியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின் படி, காலியிடம் ஏற்பட்ட சட்டமன்ற தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.
இதையடுத்து, இடைத்தேர்தல் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. தொடர்ந்ருது, ஈரோடு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுன்னி இன்று(19 தேதி) காலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்டார். அந்த மின்னணு இயந்திரங்களை சரிசெய்யும் பணியில் பெல் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக அந்த தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்ட அரசியல் கட்சிகள் சார்ந்த போஸ்டர்கள், பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அது மட்டுமில்லாமல் அரசு சார்ந்த கல்வெட்டுகளும் கட்சி தலைவர்களின் சிலைகளும் மூடப்படுகிறது. இதேபோல பொங்கலுக்கு வெளியான விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்களுக்காக ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்களும் அகற்றப்படுகின்றன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக 500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியில் பெல் நிறுவன ஊழியர்கள் எட்டு பேர் ஈடுபட்டுள்ளார்கள் இன்றைக்குள் இந்த பணிகள் நிறைவடையும். தேர்தல் நடத்தை விதிகள் ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் அமல் செய்யப்பட்டு அதற்கான கண்காணிப்புகள் நடைபெற்று வருகிறது மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு இந்த தொகுதியை இடைத்தேர்தலுக்கான வேலையில் தொடர்ந்து நடக்கும்” என்றார்.