சென்னை: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், அதிமுக வேட்பாளராக எடப்பாடி ஆதரவு வேட்பாளர் தென்னரசு அதிகாரப்பூர்வ அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மறுநாள் (9ந்தேதி) எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் இன்று முடிவடையும் நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்க இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இதனால், எடப்பாடி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் வாக்கு வேட்டையாடி வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பும் வேறுவழியின்றி, இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வருகிற 9-ந்தேதி அன்று ஈரோட்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. அதற்காக, பெருந்துறை ரோடு முத்துமஹால் அருகே பிரமாண்ட மேடை அமைத்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், தனது பலத்தை நிரூபித்து காட்ட வேண்டிய சூழலில் எடப்பாடி தரப்பு தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது.