ஈரோடு: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் காலை 11 மணி நிலவரப்படி 26.03% வாக்குப்பதிவு நடை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில். அதாவது காலை 9 மணி நிலவரப்படி சுமார் 11 சதவிகித வாக்குகள் பதிவானதாக செய்திகள் வெளியாகின. தொடர்ந்து விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகி வரும் நிலையில், முற்பகல் 11மணி நிலவரப்படி, 26.03% வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியதும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வாக்களித்தார். பின்னர், 95 சதவிகித வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சீட்டைப் பயன்படுத்தியதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.
குளிர் காரணமாக தொடக்கத்தில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்ற நிலையில், பின்னர் வாக்குப்பதிவு அதிகரித்து வருகிறது. வாக்குப்பதிவு எந்த அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதியாக நடந்து வருகிறது.
இதனிடையே மக்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என வலியுறுத்திய திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என செய்தியாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார். அதுபோல நாதக வேட்பாளரும் தனது வாக்கினை செலுத்தினார்.