ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம், தவளகிரி,, முருகன் ஆலயம்

தவளகிரி மலைக்குன்றில் வீற்றிருக்கும் முருகன் மிகவும் சக்தி வாய்ந்தவராக விளங்குகிறார். இத்தலத்து முருகனே தவளகிரி தண்டாயுதபாணி என்ற நாமத்துடன் விளங்குகிறார். தவளகிரி முருகன் கோவிலுக்கு இரண்டு விதமான வழிகள் உள்ளன. படிக்கட்டு வழியாகவும் திருக்கோவில் அடையலாம் முடியாதவர்கள் வாகனங்களில் செல்லும் சாலை வசதியும் உள்ளது.

தல வரலாறு:

தவளகிரி தரத்தில் வீற்றிருக்கும் முருகனைப் பற்றிய வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. துர்வாச முனிவர் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரரை தரிசித்துவிட்டு சத்தியமங்கலம் வழியாக கர்நாடக மாநிலம் சிருங்கேரிக்கு நடைபயணமாக சென்று கொண்டிருந்தார். அப்போது பவானி நதியை அவர் கடக்கும்போது வெள்ளம் அதிகரித்தது. திடீரென பெரிய ஆற்று வெள்ளத்தில் அவர் சிக்கித் தத்தளித்தபோது மயில் ஒன்று பறந்து வந்து ஒரு குன்றின் மீது அமர்ந்துள்ளது. முருகப்பெருமானே ஏதோ ஒரு அறிவிப்பை செய்கிறார் என்று உணர்ந்தார் துர்வாசர். உடனே மெய் சிலிர்த்து, நீந்தியபடியே கரைக்கு வந்து குன்றின் அடிவாரத்தை அடைந்தார். ஆற்றில் வெள்ளம் பெருகியபோது முருகனே மயில் மூலமாக அருகில் குன்று இருப்பதை உணர்த்தியதோடு மனம் தளராத தைரியத்தையும் தனக்கு கொடுத்துள்ளார் என்பதை உணர்ந்து அந்த நன்றி கடனாக மலையின் உச்சியில் முருகப்பெருமானுக்கு அழகிய சிலை வடித்து பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.

வெண்ணிற பாறைகளைக் கொண்ட தவளகிரி மலை ஏறி செல்ல 270 படிகள் கொண்ட பாதையும் வாகனங்கள் செல்ல தார்சாலையும் உள்ளன. அடிவாரத்தில் இருந்து மேற்கு நோக்கி நாகருடன் வீற்றிருக்கும் விநாயகரை முதலில் தரிசிக்க வேண்டும். படிக்கட்டுகள் வழியே சென்றால் கூடுதல் பலன் உண்டு. படிக்கட்டுகள் வழியே மலைக்கு நடுவில் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கும் இடும்பக் குமரன் அருள் பெற முடிலாம்.

இடும்பக் குமரனை தரிசித்த பின்னர் மேற்கு நோக்கி பார்த்தால் பவானி நதி பாய்ந்து வரும் அழகை ரசிக்கலாம். கன்னிப் பெண்களாக வள்ளி தெய்வானை முருகனை தரிசிக்கச் செல்லும் படிகள் ஏறி சென்றால் தனித்தனி சந்ததிகளில் பால விநாயகரும் வள்ளி தெய்வானையும் கிழக்கு நோக்கி அருளுகின்றனர்.

வள்ளி தெய்வானை இருவரும் முருகனை அடைய வேண்டும் என்ற நோக்கில் கன்னி பெண்களாக தவக்கோலத்தில் காட்சி தருவது கூடுதல் சிறப்பு. வேறு எந்த தலத்திலும் வள்ளியும் தெய்வானையும் கன்னிப் பெண்களாக தவக்கோலத்தில் காட்சி தருவது இல்லை. தவ வாழ்க்கை மேற்கொள்ள விரும்புவர்கள் இத் தலத்திலிருந்து தவ வாழ்க்கை துவங்கினால் சிறப்பு.

தவளகிரி முருகன் கோவிலுக்கு இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் திருமண தடை உள்ள கன்னிப்பெண்கள் வள்ளிக்கும் தெய்வானைக்கும் பட்டு பாவாடை சாத்தி மனம் உருகி வேண்டிக் கொண்டால் அந்த தடை நீங்குவதாக ஐதீகம்.

இந்த இரு சன்னதியும் தண்டாயுதபாணி சுவாமி சன்னதிக்கு கீழ் பகுதியில் அமைந்துள்ளன. மேல் பகுதியில் மூலவர் வீற்றிருக்கும் சன்னதியின் கருவறையில் தண்டாயுதபாணி சத்தியமங்கலம் நகரத்தை நோக்கி மேற்கு பார்த்தவாறு வலது கையில் தண்டாயுதமும் இடது கையினை இடுப்பில் வைத்தும் அழகு ததும்ப காட்சி தருகிறார்.

இவரின் இடது கை சுண்டு விரலில் தர்ஜனி மோதிரம் உள்ளது. இது மிகவும் விசேஷம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சமஸ்கிருதத்தில் தர்ஜனி என்றால் ஒருவரது ஞானம் கல்வி திறமை ஆகியவற்றை குறிப்பிடுகிறது.

இடது கையில் வேல் ஏந்தி உள்ளார். பழனி முருகன் மேற்கு திசை நோக்கி அருள் பாதிப்பது போல அருள் பாலிப்பதும் அங்கு வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி ஷண்முக நதி பாய்வது போல் இங்கும் தண்டாயுதபாணி மேற்கு நோக்கி உள்ளார் பவானி நதி வடக்கே இருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. இதனால் பழனி சென்ற பலனை தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்தால் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கருவறையைத் தொடர்ந்து அர்த்தமண்டபம் மகா மண்டபமும் அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் தான் அலகில் நாகத்தைப் பற்றிய மயில் மற்றும் பலிபீடம் அமைந்துள்ளன.

சித்திரை மாதம் முதல் மூன்று தினங்களில் சூரியன் மறையும் முன்னர் முதல் நாள் மூலவர் பால தண்டாயுதபாணியின் பாதத்திலும் இரண்டாவது நாள் அவரது மார்பிலும் மூன்றாவது நாள் முகத்தின் மீதும் ஒளிபடுவதால் இவர் சூரியனால் வழிபடும் முருகன் என்ற சிறப்பையும் பெறுகிறார்.

கிருத்திகை சஷ்டி காலங்களில் காலை மற்றும் மாலை விசேஷ பூஜைகள் நடைபெறும் பௌர்ணமிதோம் சிறப்பு அலங்காரம் ஆராதனைகள் செய்யப்படுகின்றன. அமாவாசை நாளில் சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெறும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை அன்று மங்கள வார பூஜையும் வெள்ளிக்கிழமை நாட்களில் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் தீபாராதனை நடைபெறுகின்றன. வைகாசி விசாகம் பங்குனி உத்திரம் தைப்பூசம் ஆகிய விசேஷங்கள் விழா போல் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கொடிவேரி செல்லும் பஸ்ஸில் பயணித்து மலைக்கோவில் பஸ் ஸ்டாப்பில் இறங்கினால் கோவில் அடிவாரத்தை அடையலாம்.