சென்னை: ஈரோடு கால்நடைத் தீவன ஆலை, ஓசூரில் புதிய தாது உப்புக் கலவை தொழிற்சாலை மற்றும் கோட்டாட்சியர் அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தல் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ. 26.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர்  ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து,  ஈரோட்டில் ரூ. 3.40 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 300 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் உயர்த்தப்பட்ட கால்நடைத் தீவன தொழிற்சாலை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரூ. 1.35 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 12 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட தாது உப்புக் கலவை தொழிற்சாலை ஆகியவற்றை  முதலமைச்சர்    திறந்து வைத்தார்.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ரூ. 114.48 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகக் கட்டடத்திற்கு முதலமைச்சர்  ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர், இ.ஆ.ப., பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் கோ.பிரகாஷ், இ.ஆ.ப., ஆவின் மேலாண்மை இயக்குனர் மருத்துவர் ந.சுப்பையன் இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.