கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த நூருல் அமீன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஆன்லைன் மூலம் ஆப்பிள் ஐபோன் வாங்க ஆர்டர் செய்திருந்தார்.
கூரியர் மூலம் அனுப்பிவைக்கப்பட்ட அந்த ஐபோன் பார்சலை பிரித்துப் பார்த்த அமீனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அந்த பார்சலில் ஐபோனுக்கு பதிலாக சோப்பு கட்டி ஒன்றும் ஐந்து ரூபாய் நாணயமும் வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அமேசான் இ-காமர்ஸ் வலைதளத்தில் ரூ. 70,900 பணம் கட்டி ஐபோனுக்கு பதில் சோப்பு டப்பா அனுப்பியது கண்டு அதிர்ச்சியுற்ற அமீன், இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
ஏற்கனவே, கேரளாவின் வடக்கு பரவூரில் ஒருவர் இ-காமர்ஸ் வலைதளத்தில் ரூ. 1.5 பணம் செலுத்தி லேப்டாப் ஆர்டர் செய்திருந்த நிலையில், அவருக்கு கட்டுக்கட்டாக செய்தித்தாள்களை பேக் செய்து அனுப்பி ஏமாற்றியது பத்திரிகைகளில் செய்தியாக வந்தது.
அந்த பத்திரிகை செய்தியை அறிந்திருந்த அமீன், கூரியர் மூலம் ஐபோனை வாங்கியவுடன், அந்த நபரின் முன்னிலையிலேயே தனது பார்சலை திறந்ததும் அல்லாமல் அதனை வீடியோவும் எடுத்திருந்தார்.
பார்சலில் வந்தது சோப்பு டப்பா தான் என்பதை தான் எடுத்த வீடியோ மூலம் சைபர் க்ரைம் போலீசாரிடம் ஆதாரத்துடன் நிரூபித்ததை அடுத்து, அந்த அட்டைப்பெட்டியின் மேல் இருந்த IMEI எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட இ-காமர்ஸ் வலைதள நிறுவனத்திடம் விசாரித்துள்ளனர்.
விசாரணையில் அந்த குறிப்பிட்ட IMEI எண் உள்ள மொபைல் போன் ஏற்கனவே விற்றுவிட்டதாகவும் ஜார்கன்ட் மாநிலத்தில் செப்டம்பர் மாதம் முதல் உபயோகத்தில் இருப்பதும் தெரியவந்தது.
அக்டோபர் மாதத்தில் தான் அமீன் இந்த போனை ஆர்டர் செய்திருந்த நிலையில், செப்டம்பர் மாதம் முதலே அது உபயோகத்தில் இருப்பதாக தெரியவந்ததால், அமேசான் நிறுவனம் அந்த மொபைலுக்கான தொகையை முழுவதுமாக திருப்பியளித்தது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சைபர் க்ரைம் அதிகாரி ஒருவர், பாதிக்கப்பட்டவருக்கு சம்பந்தப்பட்ட இ-காமர்ஸ் நிறுவனம் பணத்தைத் திருப்பி அளித்துவிட்டாலும், ஏற்கனவே விற்கப்பட்ட மொபைல் போன் பெட்டிக்குள் சோப்பை வைத்து அனுப்பியவர்கள் யார் என்பது குறித்து மேலும் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார்.