சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை ஏற்பட்டால், பொதுக்குழுவை ஆன்லைனில் நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, அதிமுக பொதுக்குழு உறுப்பினருக்கு சமூக வலைதள பயிற்சி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதிமுக பொதுக்குழு வரும் 11ந்தேதி கூடுவது உறுதியாகி உள்ளது. இதனால் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்படுவதும் உறுதியாகி வருகிறது. இதை தடுக்க ஓபிஎஸ் தரப்பில் எடுக்கப்படும் முயற்சிகள் தோல்வியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில்,  சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் வரும் 11-ம் தேதி, காலை 10 மணிக்கு பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒருவேளை பொதுக்குழு கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தால், ஆன்லைனில்  பொதுக்குழு கூட்டத்தை கூட்டவும் எடப்பாடி தரப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதற்காக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சமூக வலைதள பயிற்சி  தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்சியின் தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலர் ஆதிராஜாராம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.