டெல்லி: அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈபிஎஸ் – ஓபிஎஸ், சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் எஸ்கேப்பாகினர்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லியில் அதிமுக மூத்த தலைவர்கள் மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், தம்பிதுரை உள்பட பலர் அவர்களுடன் முகாமிட்டிருந்தனர்.
இதந்த நிலையில், இன்று காலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் சந்தித்து பேசினர். அப்போது தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்தும், அதிமுக – பாஜக கூட்டணி, உள்ளாட்சி தேர்தல், மேகதாது விவகாரம், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், சசிகலா விவகாரம் குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பிரதமருக்கு நன்றி தெரிவித்ததாக கூறினார். மேலும், பிரதமரிடம், தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்தியதாகவும், மேககதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தினோம் என்றவர், மேலும் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் சுடுகாடு ஆகிவிடும் என்று தெரிவித்தோம் என்றும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்கள் சசிகலா விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவருமே மறுத்து விட்டு அங்கிருந்து அகன்றனர்.