சென்னை:

ரான் சிறைபிடித்துள்ள கப்பலில் தமிழகத்தை சேர்ந்த மாலுமிகள் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்டுதரக்கோரி  மத்தியஅரசுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த மாதம்  19–ந் தேதி இங்கிலாந்து நாட்டு கம்பெனியின் ‘ஸ்டேனா இம்பெரோ’ எண்ணெய் கப்பல் பாரசீக வளைகுடா வழியாக ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுக் கொண்டிருந்த போது, அந்த கப்பலை  ஈரான் நாட்டு கடற்படை சிறைபிடித்தது.

சிறைபிடிக்கப்பட்ட கப்பல் தற்போது ஈரான் நாட்டின் ‘பந்தர் அப்பாஸ்’ துறைமுகத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பலில் 23 மாலுமிகள் இருக்கின்றனர். இதில் கேப்டன் உள்பட 18 பேர் இந்தியர்கள் ஆவார். மற்றவர்கள் ரஷியா, லாத்வியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இந்த கப்பலில் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஆதித்யா வாசுதேவன் (வயது 27) என்ற அதிகாரியும், புதுச்சேரியை சேர்ந்த சிலம்பரசன் என்ற ஊழியரும் சிக்கி உள்ளனர். இந்தியாவை சேர்ந்த  18 பேரை விரைந்து  விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் எடப்பாடி கடிதம் எழுதி உள்ளார்.