சென்னை: 2026ம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு,  தமிழ்நாடு  முதல்வர் ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகப் போரில் வெற்றிதரும் புத்தாண்டு 2026 என  மு.க. ஸ்டாலின் வாழ்த்து  தெரிவித்து உள்ளார். மக்களுக்கு நிறைவான சந்தோஷத்தை வழங்கும் ஆண்டாக புத்தாண்டு அமைய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்:

 தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளதாவது, உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார்ந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயகப் போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் புத்தாண்டாக மலர்கிறது 2026! புத்தாண்டுத் தொடக்கம் முதலே ‘சமத்துவம் பொங்கட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!’ எனக் கோலமிட்டு திராவிடப் பொங்கல் களைகட்டட்டும்! Advertisement உடன்பிறப்புகள் நடத்தும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கிய நிகழ்வுகள் என திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கான தொடக்கமாக இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி

 அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:- மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு பல்வேறு முத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு, மக்கள் எவ்வித அச்சமுமின்றி நிம்மதியுடன் வாழ்ந்து வந்ததை, இந்த நேரத்தில் பெருமிதத்தோடு நினைவுபடுத்த விரும்புகிறேன். மலர்கின்ற இப்புத்தாண்டு, தமிழக மக்களுக்கு நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும், நிறைந்த செல்வத்தையும், நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து, தமிழக மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என  கூறியுள்ளார்.

செல்வபெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தரகை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவில் தேர்தல்கள் மூலம் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, ஜனநாயகம் காப்பாற்றப்படுவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசமைப்புச் சட்டப்படி சாதி, மத, இனத்தின் அடிப்படையில் எந்த வேறுபாடும் காட்டக்கூடாது என்று அடிப்படை உரிமைகள் கூறுகிறது. அதை மீறுகிற வகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றியத்தில் ஆட்சி செய்து வருகிற மோடி தலைமையிலான பா.ஜ.க.வினரின் பல்வேறு நடவடிக்கைகள் மக்கள் நலனை பாதிக்கக் கூடிய வகையில் அமைந்து வருகின்றன.

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு நியாய விலை மறுப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளினால் மக்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கிற வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் சீர்குலைக்கப்படுகிறது. இதற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் நாள்தோறும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாதவர் இந்த நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அதனால், மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசுகிற வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பா.ஜ.க.வின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

2026 ஆங்கில புத்தாண்டில் இந்தியாவில் ஜனநாயகம் தழைக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கிற வகையிலும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் எடுத்து வருகின்ற முயற்சிகள் வெற்றி பெற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதன்மூலம் மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்று, ஒளிமயமான எதிர்காலம் அமைய அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், இயேசு அழைக்கிறார் தலைவர் பால் தினகரன் ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

[youtube-feed feed=1]