க்னோ

க்னோவில் நடந்த பிரியங்கா காந்தியின் பேரணி மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை நினைவூட்டுவதாக தி குவிண்ட் ஆங்கில ஊடகம் புகழ்ந்துள்ளது.

நேற்று லக்னோ நகரில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி முதல் முதலாக பேரணி ஒன்றில் கலந்துக் கொண்டார். அதில் அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஜோதித்ராதித்ய சிந்தியா ஆகியோரும் கலந்துக் கொண்டனர். மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த பேரணியை பலரும் புகழ்கின்றனர். ஆங்கில ஊடகமான தி குவிண்ட் இது குறித்து செய்திகட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “ராஜிவ் காந்தி ஈமச்சடங்கின் போது நாட்டின் அனைத்து பத்திரிகைகளிலும் அவருடைய குடும்பத்தினரின் படங்கள் வெளியாகின. ராஜிவ் காந்தியின் கொலை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போதிலும் காங்கிரசுக்கு அடுத்த தலைவர் யார் என்னும் கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தன. பலரும் இளைய தலைமுறையின் தலைமை தேவை என கருதினர்.

அப்போது அனைவர் கவனத்தையும் இந்திரா காந்தியின் சாயலில் இருந்த பிரியங்கா காந்தி கவர்ந்தார். அவர் தலைமை ஏற்பாரா என கேள்வி அப்போது எழுந்தது. சுமார் 30 வருடங்களாக நாடெங்கும் குறிப்பாக வட இந்தியாவில் பிரியங்கா கட்சியில் இணைவாரா என பலரும் எதிர்பார்த்தனர். அவருடைய சகோதரர் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆன போதிலும் கட்சிக்கு ஏதோ ஒரு பலவீனம் உள்ளதாக பலரும் கருதினர்.

பிரியங்கா முழு நேர அரசியலில் இறங்க மறுத்து வந்த போதும் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வந்தது. அவருக்கு திருமணமாகி குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பு உள்ளதாக கூறி முழு நேர அரசியலுக்கு அவர் வராமல் இருந்த போதும் மக்கள் அவர் வருகையை எதிர்பார்த்தனர்.

இறுதியாக ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அவரை பொதுச் செயலராகவும் உத்திரப் பிரதேச பொறுப்பாளராகவும் நியமித்தது.

பிரியங்காவுக்கு பொறுப்பு அளிக்கப்பட்ட உடன் அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுக்களில் ஒன்று அவர் சற்றே படபடப்பானவர் மற்றும் கோபம் வந்தால் கத்தக் கூடியவர் என்பதாகும். அத்துடன் அதை விட முக்கியமாக அவருடைய உடைகள் பற்றிய விமர்சங்களும் அதிகரித்தன. அவர் புடவை அணியாமல் ஜீன்ஸ் அணிவதை பல அரசியல்வாதிகள் விமர்சித்தனர்.

அதன் பிறகு பலரும் அவருடைய உடைக்கும் அரசியலுக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது என புரிந்துக் கொண்டனர். அத்துடன் கோபம் என்பது அவருடைய முன்னோர்களிடம் இருந்து வந்தது எனவும் அவர் கோபம் நியாயமானது எனவும் பலரும் அறிந்துக் கொண்டனர்.

ராகுல் காந்தியால் தற்போது அரசியல் செய்ய முடியாத நிலை உள்ளதால் அவர் தனது சகோதரியை அரசியலில் நுழைத்துள்ளார் என பாஜக கூட்டணிக் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் ராகுல் காந்தி ஏற்கனவே தனது பலத்தை நிரூபித்த பிறகே பிரியங்காவை கட்சிப்பணிக்கு நியமித்துள்ளார். இதர்கு முக்கிய காரணம் கட்சியில் பெண்களின் பங்களிப்பை அவர் விரும்புவது மட்டுமே ஆகும்.

பிரியங்கா காந்தியை பொறுத்த வரையில் அவருடைய புத்துணர்வு கொண்ட முகம் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை தருகிறது என கூறலாம். நேற்று நடந்த பேரணியின் போது பிரியங்காவின் உருவில் இந்திரா காந்தியை பலரும் கண்டுள்ளனர். இந்திரா காந்தியை துர்க்கை என அழைத்ததைப் போல தற்போது பிரியங்காவையும் அழைக்க தொடங்கி உள்ளனர். அத்துடன் அவருடைய தாய்மை பொருந்திய ஒரு அழகான முகம் பலரையும் கவர்ந்துள்ளது எனவும் கூறலாம்.

அத்துடன் நியாயமான விஷயங்களுக்கு கோபம் கொள்வதும் இந்திரா காந்தியின் வழக்கங்களில் ஒன்றாகும். எனவே காங்கிரசை நடத்திச் செல்ல ராகுல் காந்திக்கு பிரியங்கா காந்தியின் பணி உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஏற்கனவே ராகுல் காந்தியை இளவரசர் எனக் கூறும் பாகஜவினர் இளவரசர் மற்றுமிளவரசி ஆகிய இருவரின் தாக்குதலையும் சேர்ந்து சமாளிக்க வேண்டி வரும்” என கூறப்பட்டுள்ள்து.