2019 உலக கோப்பை சாம்பியன் இங்கிலாந்து: சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி

Must read

2019ம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், சூப்பர் ஓவர் மூலம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்து நாட்டின் லார்ட்ஸ் மைதானத்தில், 2019ம் ஆண்டுக்கான உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் அலைமோதியதால், மைதானம் நிரம்பி வழிந்து காட்சியளித்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

துவக்க வீரர்களாக களமிறங்கிய மார்டின் குப்டில் 18 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே குவித்து வெளியேற, மறுமுனையில் நிதானமாக விளையாடிய ஹென்றி நிக்கோலஸ் 77 பந்துகளில் 55 ரன்களை குவித்தார். பின்னர் வந்த கேன் வில்லியம்ஸன் 53 பந்துகளில் 30 ரன்களும், டாம் லாத்தம் 56 பந்துகளில் 47 ரன்களும் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். எனினும் நியூசிலாந்து அணியின் இதர வீரர்கள் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க இயலாமல் திணறினர். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்தது.  இங்கிலாந்து அணி தரப்பில், கிறிஸ் வோக்ஸ் மற்றும் லெய்ம் புலுங்கெட் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.

242 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு, 20 பந்துகளில் 17 ரன்களை மட்டுமே குவித்து ஜேசன் ராய் வெளியேற, அவரை தொடர்ந்து ஜோ ரூட் 30 பந்துகளில் 7 ரன்களை மட்டுமே குவித்து வெளியேறினார். ஜோ ரூட் நிறைய பந்துகளை வீணடித்தது, கடைசியில் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் தலைவலியாக அமைந்தது.

பின்னர் களமிறங்கிய மார்கன் ஆட்டத்தை கையெலெடுப்பதற்குள் பேர்ஸ்டோ 55 பந்துகளில் 36 ரன்களை மட்டுமே குவித்து ஆட்டமிழக்க, 22 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே குவித்து பேர்ஸ்டோவும் ஏமாற்றமளித்தார். இதனால் 86 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது.

இதன் பின்னர் களமிறங்கிய ஸ்டோக்ஸ், பட்லருடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஒருபுறம் நிதானமான ஆட்டத்தை ஸ்டோக்ஸ் வெளிப்படுத்த, மறுபுறம் பட்லர் அதிரடியாக ஆடினார். இரு வீரர்களும் பவுன்டரிகளும், சிக்சர்களும் விளாச, இங்கிலாந்து அணி 150 ரன்களை கடந்து வெற்றி இலக்கை நோக்கி முன்னேற தொடங்கியது. 5வது விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்த இந்த ஜோடியை பிரிக்க இயலாமல் நியூசிலாந்து அணி தடுமாறிய நிலையில், 45வது ஓவரை ஃபர்குசன் வீச அழைக்கப்பட்டார். இந்த ஓவரில் 60 பந்துகளில் 59 ரன்களை குவித்திருந்த பட்லர் வெளியேற, தனது அதிரடியை ஸ்டோக்ஸ் தொடர்ந்தார்.

ஆனாலும் மறுபுறம் விக்கெட்கள் வேகமாக வீழ்ந்தன. இதனால் 49 ஓவர்களில் இங்கிலாந்து 8 விக்கெட்களை இழந்து 227 ரன்களை மட்டுமே குவித்திருந்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் இரு பந்துகளில் ரன் ஏதும் அடிக்கப்படவில்லை. மூன்றாவது பந்தை சிக்சருக்கு பறக்க விட்ட ஸ்டோக்ஸ், 4வது பந்தில் 2 ரன்களை மட்டுமே குவித்திருந்தார். ஆனால் பந்து எதிர்பாராத விதமாக ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு கீப்பருக்கு பின்புற பவுண்டரிக்கு செல்ல, 4 ரன்களுன், ஓடப்பட்ட 2 ரன்களும் சேர்த்து 6 ரன்கள் இங்கிலாந்துக்கு கொடுக்கப்பட்டது. இதனால் 2 பந்துகளில் 3 ரன்கள் தேவை என்கிற சூழல் உருவானது.

 

5வது பந்தில் ஸ்டோக்ஸ் இரண்டு ரன்கள் எடுக்க முற்பட்டு, அது இயலாமல் போனது. அதேநேரம் அணிக்கான தனது விக்கெட்டை அடில் ரஷித் தியாகம் செய்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்கிற நேரத்தில் மீண்டும் 2 ரன்களை குவிக்க ஸ்டோக்ஸ் முற்பட, 2வது ரன் ஓடும்போது ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் போட்டி சமன் ஆனது.

இறுதிப் போட்டி சமன் ஆன காரணத்தால், நடப்பு உலக கோப்பை தொடரில் முதல் முறையாக சூப்பர் ஓவர் பயன்படுத்தப்பட்டது. இரண்டாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து, இதில் முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணிக்காக ஸ்டோக்ஸ், பட்லர் என இருவர் களமிறங்கினர். முதல் பந்தில் ஸ்டோக்ஸ் 3 ரன்கள் குவிக்க, 2வது பந்தில் பட்லர் 1 ரன் எடுத்தார். 3வது பந்தில் பவுண்டரி அடித்த ஸ்டோக்ஸ், 4வது பந்தில் 1 ரன் எடுத்தார். 5வது பந்தில் 2 ரன் எடுத்த பட்லர், கடைசி பந்தை பவுண்டரிக்கு தட்டிவிட, 16 ரன்கள் தேவை என்கிற சூழல் ஏற்பட்டது.

16 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய நியூசிலாந்து அணி சார்பில், நீஷமும், குப்டிலும் களமிறங்கினர். சூப்பர் ஓவரின் முதல் பந்து வைடாக போடப்பட, மீண்டும் அந்த பந்து வீசப்பட்டது. அப்போது முதல் பந்தில் 2 ரன்கள் குவித்த நீஷம், 2வது பந்தில் சிக்சர் விளாசினார். மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் தொடர்ந்து 2 ரன்கள் எடுத்த நீஷம், 5வது பந்தில் சிங்கில் மட்டுமே எடுத்தார். கடைசி பந்தை எதிர்கொண்ட குப்டில், 2 ரன்கள் ஓட முற்பட்டு ரன் அவுட் ஆக, சூப்பர் ஓவரும் சமன் ஆனது.

ஐசிசி விதிகளின் படி, அதிக பவுன்டரிகள் மற்றும் சிக்சர்கள் விளாசிய அணியே வெல்லும் அணியாக இத்தகைய சூழலில் அறிவிக்கப்படும் என்பதால், ஆட்டத்தில் அதிக பவுன்டரிகள் மற்றும் சிக்சர்கள் அடித்த அணியாக இங்கிலாந்து அறிவிக்கப்பட்டு, இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதன் முறையாக கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து நாடு, கோப்பையை கைப்பற்றியிருக்கிறது.

போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்டோக்ஸ் தேர்வு செய்யப்பட, தொடர் நாயகனாக கேன் வில்லியம்ஸன் தேர்வு செய்யப்பட்டார்.

More articles

Latest article