லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டி துவங்கியது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், பாபர் ஆஸம் 44 பந்தில் 56 ரன்களும், ஃபகார் ஸமான் 22 பந்துகளில் 36 ரன்களும், முகமது ஹபீஸ் 36 பந்துகளில் 69 ரன்களும் அடிக்க, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களைக் குவித்தது பாகிஸ்தான்.

பின்னர், சவாலான இலக்கை நோக்கி பயணத்தைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு, பேர்ஸ்டோ 24 பந்துகளில் 44 ரன்களும், டாவிட் மாலன் 36 பந்துகளில் 54 ரன்களும், இயான் மோர்கன் 33 பந்துகளில் 66 ரன்களும் அடித்து கைகொடுக்க, 19.1 ஓவரிலேயே, இங்கிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் அடித்து வென்றது.