டில்லி

நேற்று இந்தியப் பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைப்பேசியில் பேசி உள்ளார்.

இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் இரு டோஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என இங்கிலாந்து அரசு அறிவித்தது.  இது இந்தியாவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.   இதையொட்டி இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் தனிமையில் இருக்க வேண்டும் என இந்திய அரசு அறிவித்தது.    இந்நிலையில் இங்கிலாந்து தனது உத்தரவைத் திரும்பப் பெற்றது.

இந்நிலையில் நேற்று இந்தியப் பிரதமர் மோடியுடன் இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைப்பேசியில் பேசி உள்ளார். இருவரும் இரு நாட்டு வர்த்தகம், தடுப்பூசி சான்றிதழ் போன்றவை குறித்துப் பேசி உள்ளனர்.   அப்போது இந்தியத் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரித்த இங்கிலாந்து பிரதம்கருக்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

போரிஸ் ஜான்சன் இனி இங்கிலாந்து வரும் இந்தியர்களுக்கு 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் அவசியமில்லை என உறுதி அளித்துள்ளார்.   விரைவில் கிளாஸ்கோவில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் காலநிலை மாற்றம், ஆப்கான் நிலவரம், இரு நாட்டு வர்த்தகம் குறித்த ஆலோசனை நடத்துவது குறித்து விவாதித்துள்ளனர்.