சிட்னி: எங்களின் நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் ஹீதர் நைட்.
பெண்கள் டி-20 உலகக்கோப்பைத் தொடரில், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த முதலாவது அரையிறுதிப் போட்டி, மழைக் காரணமாக, ஒரு பந்துகூட வீசப்படாமல் முற்றிலும் கைவிடப்பட்டது.
எனவே, லீக் சுற்றில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் இந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு, இறுதிப்போட்டிக்கு முதன்முறையாக முன்னேறியது இந்தியா.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணி கேப்டன் ஹீதர் நைட், “விதி அப்படியானதாக இருந்தால் எதையும் செய்ய முடியாது. எங்களின் நிலைமை எந்த அணிக்கும் வரக்கூடாது. வருங்காலத்தில் விதிமுறைகள் மாற்றப்படும் என்று நம்புகிறோம். அதை நோக்கி நாம் நகர வேண்டும்.
இந்த முடிவை ஏற்றுக்கொள்வது தற்போதைய நிலையில், எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது” என்றார்.
மழை வரக்கூடும் என்ற காரணத்திற்காக முன்வைக்கப்பட்ட ‘ரிசர்வ் டே’ கோரிக்கையும் ஐசிசி அமைப்பால் நிராகரிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.