லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில், 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச முடிவெடுத்தது. இதனடிப்படையில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஜோஸ் பட்லர் 29 பந்துகளில் 44 ரன்களையும், டேவிட் மலன் 43 பந்துகளில் 66 ரன்களையும் அடித்தனர்.
முடிவில், இந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை அடித்தது. ஆஸ்திரேலியா தரப்பில், ஆஷ்டன் அகார், கேன் ரிச்சர்ட்சன் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
பின்னர், சற்றே எளிய இலக்கை நோக்கி ஆடத்தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில், டேவிட் வார்னர் 47 பந்துகளில் 58 ரன்களையும், ஆரோன் பின்ச் 32 பந்துகளில் 46 ரன்களையும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 23 ரன்களையும் அடித்தனர்.
ஆனால், சரியான ஃபினிஷிங் கிடைக்காத காரணத்தால், அந்த அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களே எடுத்து, 2 ரன்களில் தோற்றது.
3 போட்டிகள் கொண்ட இத்தொடரில், தற்போது இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.