சென்னை: பொறியியல் படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகள் 2 வாரம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், டிசம்பர் 27-ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கல்விநிலையங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. அதுபோல ஆன்லைன் தேர்வுகளும் நடைபெற்று தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. தற்போது நேரடி வகுப்புகள் நடைபெறுவதால், நேரடி தேர்வுகள்தான் நடைபெறும் என உயர்கல்வித்துறை, அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்து உள்ளது.

அதன்படி, பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு  அறிவித்தது. அத்துடன்,  இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். தேர்வுக்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் இன்டெர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும் எனவும் கூறியிருந்தது.

இந்த நிலையில், தற்போது, திடீரென தேர்வை 2 வாரம் தள்ளி வைப்பதாக அறிவித்து உள்ளது. மாணவர்கள் அவகாசம் கேட்டதால், செமஸ்டர் தேர்வுகள் 2 வாரம் தள்ளி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ள  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ்  டிசம்பர் 27-ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.