சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்க ‘நான் முதல்வன் திட்டம்’ தொடங்கப்பட்டு இருப்பதாகவும், வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ப பொறியியல் பாடத்திட்டத்தை மாற்றப்படும் என்றும், அதற்கான குழு அமைக்கப்பட்டு உள்ளது என்று சட்டப்பேரவை யில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் மே 10ஆம்தேதி வரை 22 நாள்கள் நடைபெறவுள்ளது. பேரவையில், தினசரி துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதுவரை பல்வேறு துறை சார்பிலான மானிய கோரிக்கை விவாதங்கள் நடை பெற்று வருகின்றன. இன்று ஆதிதிராவிடர் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.
முன்னதாக பேரவை கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, திருப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பனிர், திருப்பூர் மாவட்டம் மடத்துகுளத்தில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி தொடங்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில், பொறியியல் கல்லூரிகளில் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 71,934 இடங்கள் காலியாக உள்ளன .வரும் ஆண்டிலும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஓரளவுக்கு தான் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். எனவே திருப்பூர் மாவட்டம் மடத்துகுளத்தில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்க ‘நான் முதல்வன் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். பொறியியல் பாடத்திட்டத்தை மாற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக் கென தனி கல்லூரி தொடங்குவதை விட, ஆண்கள் – பெண்கள் சேர்ந்து படிப்பதில் தவறில்லை. பின் தங்கிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அரசு கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.