சென்னை
இந்த வருடமும் மருத்துவக் கல்லூரி மாணவர் கலந்தாய்வுக்கு பிறகு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் அறிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டான 2019-20 ஆம் ஆண்டுக்கான பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகன் இல்லத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்த்ன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். கூட்ட முடிவில் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்ஹார்.
அப்போது அன்பழகன், “இந்த ஆண்டான 2019-20 ஆம் ஆண்டுக்கான ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வு குறித்து முடிவு எடுக்க இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வழக்கம் போல மருத்துவக் கல்லூரி கலந்தாவுக்கு பிறகு பொறியியல் கலந்தாய்வு தொடங்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான தேதிகள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
தனியார் பொறியியல் கல்லூரிகள் டில்லி போன்ற பகுதிகளில் உள்ளதைப் போல் தமிழகத்திலும் கல்விக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றன. கட்டணம் குறித்து முடிவெடுக்கும் குழு இது குறித்து முடிவு செய்ய உள்ளது. ஆனால் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.