கடலூர்,
ணம் செல்லாது என அறிவித்தபிறகு நாடு முழுவதும் கருப்புபணத்தை வருமான வரித்துறை யினர் வேட்டையாடி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கூட்டுறவு வங்கிகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கருப்பு பண முதலைகளின் கருப்பு பணத்தை மாற்ற பல தனியார் வங்கி அதிகாரிகள் உதவி வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுபோல் தமிழகத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளும் அவர்களுக்கு உதவியதாக புகார்கள் எழுந்தது.
அதன் அடிப்படையில் ஏற்கனவே சேலம், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிகளின் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.  தொடர்ந்து நேற்று கடலூர் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இணைப்பதிவாளர் அலுவலகத்தில் அமலாக்கபிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
நேற்று காலை வங்கிக்கு வந்த  அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வங்கியின் பண பரிவர்த்தனை பதிவேடுகளை ஆய்வு செய்தனர்.
ரூபாய் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு,  நவம்பர் 10ந் தேதி முதல் 14ந்தேதி வரையில் கடலூர் மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் 29 கிளை வங்கிகள் மற்றும் சிதம்பரம், விருத்தாசலம் நகர வங்கிகளில் 5 நாட்களில்  டெபாசிட் பெறப்பட்ட ரூ.51 கோடிக்கான கணக்குகளையும்,   அதிக அளவில் பணம் டெபாசிட் செய்தவர்கள் பற்றிய விவரங்களையும் சேகரித்தனர்.
மேலும்  ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலில் சந்தேகத்துக்கு உரியவர்கள் 13 பேரை நேரில் வரவழைத்து அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். அவர்கள் கூறிய விளக்கங்களை எழுத்து மூலம் பெற்றனர்.
மேலும்  லாக்கரில், பொதுமக்களிடம் இருந்து வாங்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்கள் சாக்கு பைகளில் வைக்கப்பட்டிருந்தது.  ரூ.30 கோடி அளவிலான பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டு அவற்றை சரிபார்த்தனர்.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளின் பண பரிவர்த்தனை பதிவேடுகள் மற்றும் அவை குறித்த கணினி பதிவுகளை பெற்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். இரவு 7.30 மணிக்கு சோதனை முடிவடைந்தது.சோதனைக்கு பின்னர் வெளியில் வந்த அதிகாரிகளிடம் முறைகேடுகள் குறித்து கேட்டபோது பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றனர்.
கடலூர் மாவட்ட மத்திய  கூட்டுறவு வங்கியில் 8 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனை  அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களும் வங்கி முன் திரண்டனர்.
இந்த ரெய்டு காரணமாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மற்றும் அதில் பொறுப்பு வகிக்கும் அரசியல் கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஏற்கனவே சேகர்ரெட்டி போன்றவர்களுக்கு கருப்பு பணத்தை மாற்ற கூட்டுறவு வங்கிகளும் உதவி புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.