திண்டுக்கல்: லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி. இரண்டாவது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனுவை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.
அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்த, சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாவிடம், மதுரை கோட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் பெற்றபோது கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி அன்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், மருத்துவர் சுரேஷ் பாபு மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி முதலில் ரூ.20 லட்சம் வாங்கிய நிலையில் மீதமுள்ள ரூ.20 லட்சத்தை வாங்கியபோது திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் அங்கித் திவாரி சிக்கினார். அவரிடம் நடத்தப்பட்ட பல மணி நேர விசாரணைக்கு பிறகு, மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை அள்ளிச் சென்றனர். இதைத்தொடர்ந்து, அங்கித் திவாரி திண்டுக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், ஜாமின் கோரி, திவாரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீனில் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்ரது, 2வது முறையாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் கடந்த மாதம் 30ம் தேதி மனு தாக்கல் செய்தாா். கடந்த 1ம் தேதிக்கு இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸாா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார். இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.