சென்னை: தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை ரெய்டு. தொடர்ந்து வருகிறது. மேலும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது தயாரித்து வழங்கும் நிறுவனங்களிலும் சோதனை தொடர்கிறது. இது தமிழ்நாடு அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, பதவி இழந்து, சுமார் ஓராண்டு சிறையில் இருந்து, தற்போது ஜாமினில் வெளிவந்து, மீண்டும் அமைச்சரானது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் தலைமையின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் உள்பட அவருக்கு சொந்தமான பல இடங்களில், நண்பர்கள் உறவினர்களின் வீடுகள் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானம் தயாரித்து வரும் ஜெகத்ரட்சகன் மற்றும் எஸ்என்ஜெயமுருகன் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை நேற்று முதன் சோதனை நடத்தி வருகிறது. பல இடங்களில் சோதனைகள் முடிவடைந்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தாளமுத்து நடராஜன் மாளிகை வளாகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இன்று 2ஆவது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்கிறது.
மேலும், ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான தயாரிப்பு நிறுவனங்களான அக்கார்டு, பாண்டிபஜாரில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ACCORD DISTILLERS & BREWERS PRIVATE LIMITED, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள எஸ்என்ஜே நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையின் இந்த திடீர் சோதனை அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் நிறுவனமான டாஸ்மாக் நிறுவனத்தில் நேற்று தொடங்கிய ரெய்டு, நேற்று இரவு முழுவதும் விடிய விடிய நடைபெற்றது. இந்த சோதனையின்போது, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிலவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிஐஎஸ்எஃப் விழாவில் இன்று பங்கேற்றுள்ள நிலையில், அமலாக்கத்துறை சோதனை அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.