சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஏராளமான ஊழல் புகார்கள் உள்ள நிலையில், பல முறை அவரது வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்கள், அவரது தம்பி வீடு மற்றும் அவர்களது குடும்ப மற்றும் அலுவலக நண்பர்களின் வீடுகள் அலுவலகங்களில் சோதனைகள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சார்பில் சோதனைகள்  நடத்தப்பட்டது. இதையடுத்து பல கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டன. தொடர்ந்து,  அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய  இடங்களில்   அமலாக்கத்துறை  சோதனை நடத்தியதுடன், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜூன் 14-ம் தேதி  அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தது. விசாரணைக்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, அவரது ஜாமின் மனுவை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரணை நடத்த அறிவுறுத்தியது. அதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி சார்பில், ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு நேற்று ( 11ந்தேதி) விசாரிக்கப்பட்டது. மனுமீது 4 நாளில் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில்,  அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம், அண்ணாநகர்  மற்றும் செந்தில் பாலாஜியின் நண்பர் வீடு உள்பட 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Chennai Senthil Balaji ED சென்னை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை