சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்குள்ள இந்திய தொழில்முனைவோருடன் கலந்துரையாடினார்.

வாஷிங்டனில் உள்ள ப்ரூகிங்ஸ் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

இயற்கை எரிவாயு தட்டுப்பாடு மற்றும் கையிருப்பு குறித்து பேசிய நிர்மலா சீதாராமன் இவை இரண்டும் தற்போது இந்தியாவுக்கு சவாலாக உள்ளது என்று கூறினார்.

மேலும், இயற்க்கை எரிவாயுவுக்கான தட்டுப்பாடு அதிகரிக்கும் பட்சத்தில் மின்சார உற்பத்திக்கு நிலக்கரியை பயன்படுத்த வேண்டிய நிலை வரும் என்று கூறிய அவர் காற்றாலை மற்றும் சூரிய சக்தி உள்ளிட்ட மாற்று எரிசக்தி மூலம் அதிக அளவு மின்சாரம் தயாரிக்க முடியாது என்று தெரிவித்தார்.

புவி வெப்பமயமாவதை தடுக்க உலகின் பல்வேறு நாடுகளும் நிலக்கரியை தவிர்த்து மாற்று எரிசக்தி மூலம் மின்சார உற்பத்தி செய்து வரும் நிலையில், நிர்மலா சீதாராமனின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தவிர, ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உரம் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் பலவும் அடுத்த ஆண்டு பெரும் பொருளாதார மந்தநிலையை சந்திக்க உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் நேற்று தகவல் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்பு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.