திருவனந்தபுரம்: கேளராவில்மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சியில், முதல்வர் பதவிக்கு கடுமை யான போட்டி நிலவிய நிலையில், பலத்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில முதலமைச்சராக வி.டி. சதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, முதல்வர் தேர்வு விசயத்தில், காங்கிரஸ் மக்களவை தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர், போட்டியாளர் கே.சி. வேணுகோபாலைச் சந்தித்து பேசிய நிலையில், தற்போது விடிசதீசன் காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
நடைபெற்று முடிந்த கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்த போதிலும், அடுத்த முதல்வர் யார் என்பதில் கடந்த 10 நாட்களாக நீடித்து வந்த குழப்பங்களுக்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி.டி.சதீசன் புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவர் விரைவில் மாநில முதல்வராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கேரளாவில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பே அங்கு காங்கிரஸ் கட்சிக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக ஐந்து மாநில தேர்தல்களில், கேரளா மீது காங்கிரஸ் தலைமை தனிக்கவனம் செலுத்தி வந்தது. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில் மே மாதம் நான்காம் தேதி வாக்கு எண்ணப்பட்ட நிலையில் 140 உறுப்பினர்களைக் கொண்ட கேரளாவில் ஆளும் அரசாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி வெறும் 35 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதே நேரம் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப் கூட்டணி 102 இடங்களில் வென்று மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. மேலும் பாஜக வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.
கேரளாவில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும், முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இதனிடையில் கேரள முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் இடையில் போட்டி நிலவி கொண்டிருந்தது. இதன் காரணமாக கேரள மக்கள் யார் நமக்கு முதல்வராக வர போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து, “கேரள சட்டமன்ற காங்கிரஸ் கட்சி (சி.எல்.பி) மே 7-ம் தேதி திருவனந்தபுரத்தில் கூடி, புதிய தலைவரை நியமிக்க காங்கிரஸ் தலைவருக்கு முழு அதிகாரம் அளித்து ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி, காங்கிரஸ் தலைவர், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கேரள எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்த ஏ.ஐ.சி.சி பார்வையாளர்களுடன் விரிவான ஆலோசனைகளை நடத்தினர். எம்.பி-க்கள் மற்றும் முன்னாள் பி.சி.சி தலைவர்கள் உட்படப் பல தலைவர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
இந்த விவாதங்களின் அடிப்படையில், வி.டி. சதீசன் சட்டமன்றக் கட்சித் தலைவராக நியமிக்கப்படுகிறார்,” என்று கேரளப் பொறுப்பாளர் தீபா தாஸ்முன்சி, மத்தியப் பார்வையாளர்கள் அஜய் மக்கான், முகுல் வாஸ்னிக் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருடன் டெல்லியில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இதன்பிறகு கேரளா 10 நாட்களாகக் காத்திருந்த அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தலைமையின் முடிவை முழுமனதுடன் வரவேற்பதாகவும், சதீசன் மற்றும் அவரது அரசுக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாகவும் வேணுகோபால் கூறினார். “வி.டி. சதீசனுக்கு எனது வாழ்த்துகள். மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஐ.யு.டி.எஃப்-க்கு ஆதரவாகப் பெரிய தீர்ப்பை வழங்கியுள்ளனர். சதீசன் தலைமையிலான அரசு மக்களின் அபிலாஷை களை நிறைவேற்றும்,” என்றார்.