ஏன் கொண்டாட வேண்டும் இளையராஜாவை – தொடர் – அத்தியாயம்-2
திருமிகு. இராமசாமி – திருமதி. சின்னத் தாயம்மாள் பெற்றோர்களால், ஞான தேசிகன் என்னும் பொருத்தமான பெயர் சூட்டப்பட்டவர் !!
இளமையில் வறுமைக்கு ஆளானாலும், வறுமையிலும் செம்மையாக தன் தாயாரால் வளர்க்கப் பட்டவர்! பண்ணைபுரம் என்னும் ஒரு சாமானியக் கிராமத்தில் இருந்து, பிழைப்புத் தேடிச் சென்னைக்கு வந்தவர்! சென்னைப் பட்டிணத்தில், ஆரம்பத்தில் ஒருவேளை சோற்றுக்குக் கூட அல்லாடியவர் – தன்ராஜ் மாஸ்டரிடம் கிடார் கற்றுக் கொண்டார் !
ஒரு நாள் அவருக்கு வெளிச்சம் பிறந்தது !
தனக்கு வாழ்வளித்த சரஸ்வதி தேவிக்கு மனமுருக நன்றி சொன்னபடி, அவளுக்கான பிரதியுப காரமாக இசையே தன் வாழ்வாகக் கொண்டு அல்லும் பகலுமாக உழைக்க ஆரம்பித்தார் இளையராஜா ! திரையிசையின் உச்சம் தொட்டார் ! நாட்டுப்புற இசையை, மேல் நாட்டு இசையோடு கலந்து புதிய, புதிய இசை வடிவங்களைத் தமிழ்க் காதுகளில் தவழ விட்டார் !
இசையில் தனக்கு மேம்பட்ட மகான்களாகிய, பெரியவர் மகாதேவன், பெரியவர் எம்.எஸ்.வி போன்றவர்களை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வணங்கித் தொழுதார் !
டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, டி.வி. கோபால கிருஷ்ணன் போன்ற சாஸ்திரீய சங்கீத விற்பன்னர்களை எல்லாம் தேடித் தேடிச் சென்று, அவர்களோடு கலந்துகொண்டு தன் இசையை மேலும், மேலும் கூர்மைப் படுத்திக் கொண்டார் ! அவர்களது, ஆச்சரியம் கலந்த மரியாதையையும் பெற்றார் !
எங்கெணும் இளையராஜாவின் இசை என்று தமிழ்நாடு கொண்டாடியது !
ஆல் இண்டியா ரேடியோ – விவிதபாரதி – சிலோன் ரேடியோ என நீக்கமற நிறைந்திருந்தார் இளையராஜா ! எங்கும் நாம்தானே என்று அவர் நினைத்ததே இல்லை ! போதும் என்று அவர் ஓய்வெடுத்ததே இல்லை ! ஓயாமல் ஓடிக் கொண்டிருந்தார் இசைக் கடலின் தீரமெங்கும்…..
எந்த நிலையிலும் அவரது இசை saturation point ஐ தொட்டதில்லை.
இளையராஜாவுக்கு பிறகுதான் ரிகார்டிங் ஸ்டூடியோ ஒரு ஒழுங்கு முறைக்கு உட்பட்டது எனலாம் !
இளையராஜாவின் காலத்தில்…
காலை, ஏழு மணிக்கெல்லாம் இசைக் கலைஞர்கள் ஸ்டூடியோவில் அஸெம்பிள் ஆக வேண்டும். அவர்களுக்குண்டான டிஃபன் காஃபி எல்லாம் தயாராக இருக்க வேண்டும். அதை முடித்து அவர்கள் ஏழரை மணிக் கெல்லாம் ஸ்டூடியோ ஹாலுக்குள் இருக்க வேண்டும். அதற்கு முன்பாகவே அங்கு வந்து விடும் இளையராஜா அவர்களுக்குண்டான இசைக் கோர்வைகளை கொடுத்து விடுவார் ! அதை சரி பார்த்துக் கொண்டு தயாராக இருந்தாக வேண்டும்.
சரியாக ஒன்பது மணிக்கு ரெக்கார்டிங் ஆரம்பித்தாக வேண்டும். 7 to 1 மற்றும் 2 to 9 கால்ஷீட்டுகளில் திட்டமிட்டாற் போல அனைத்தும் நடந்தேறியாக வேண்டும்.
ஒப்புக் கொண்டபடி ப்ரொட்யூஸரின் கைகளுக்கு பாட்டு சென்று சேர்ந்தாக வேண்டும் !
எல்லோரும் வாசித்து முடித்ததும் உடனுக்குடன் அவர்களுக்கான ஊதியம் செட்டில் செய்யப்பட்டு விடும் ! அதன் பின், கோரஸ் எடுக்கப்படும் ! பிறகு, பாடகர்களை அழைத்து தான் நினைத்தது வெளிவரும் வரையில் சரியாக பாட வைக்க வேண்டும். பிறகு அவர்களும் சென்று விடுவார்கள் ! அந்த ஸ்டூடியோவே வெறிச்சிட்டு விடும் !
ஆனால், காலை 9 மணிக்கு ஸ்டூடியோவுக்குள் நுழைந்த இளையராஜா மட்டும் மிக்ஸிங் – எடிட்டிங் என்று ஓயாமல் உழைத்துக் கொண்டிருப்பார்.
இளையராஜா காலத்தில் காலத்தில் இப்போது இருப்பது போல டிஜிட்டல் டெக்னாலஜி எல்லாம் இல்லை ! நூறு, ட்ராக்குகள் இரு நூறு ட்ராக்குகள் என்னும் சாகஸங்கள் இல்லை ! அதிகபட்சம் நான்கே ட்ராக்குகள் தான். அதிலேயே மொத்த இசைக் கோர்வைகளையும் பொறுமையாக ரெக்கார்டு செய்து – பேலன்ஸ் செய்து – எடிட் செய்து – ஈக்யூ செய்து – எஃபெக்ட்ஸ் சேர்த்து – மாஸ்டர் செய்து சுகந்த லஹரியாக மக்களின் காதுகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்!
ட்யூன் செய்து கொடுப்பதோடு சரி, இனிமேல் அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று எதையும் தட்டிக் கழிக்க மாட்டார் இளையராஜா ! ஒவ்வொன்றையும் தன் நேரடி மேற்பார்வையில் செய்து முடிப்பார். தொழிலின் மீது அப்படி ஒரு பொறுப்பு – பக்தி !
இப்போது போல, எப்போது வருமோ, எப்படி வருமோ என்று மாதக் கணக்கில் தயாரிப்பாளர்களை நோகடித்தவரில்லை ! தன்னை நம்பி வரும் தயாரிப்பாளர்களுக்கு அவ்வளவு நம்பிக்கையை தந்தவர் இளையராஜா !
இளையராஜாவிடம் கால்ஷீட் வாங்குவது கடினம் ! அப்படி வாங்கி விட்டால், பொறுப்பை ஒப்படைத்தோமா, நாம் பாட்டுக்கு ஷூட்டிங்கை கவனித்தோமா என்று நிம்மதியாக தயாரிப்பாளர்கள் இருக்க முடியும் ! இசை – குறித்த நேரத்துக்கு வந்து சேர்ந்து விடும் ! இளையராஜாவின் காலத்தில், ப்ரொட்யூஸருக்கு எந்த டென்ஷனும் இருக்காது. எல்லாம் ஒரு மிலிட்டரி ஒழுங்கில் – உயர்ந்த தரத்தோடு நடந்து முடியும் !
அன்றைய இளையராஜாவுக்கு ஈடாக இன்னொரு இசையமைப்பாளர் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை ! அவரது இசைக் கோர்வைகளையும் , இசையில் அவர் நிகழ்த்தும் எதிர்பாராத் தன்மை யையும் கண்டு – கேட்டு பாலிவுட் இசை மேதைகள் எல்லாம் அரண்டு போயிருந்தார்கள் ! அனு மாலிக் போன்றவர்கள் அவரது ட்யூன்களை அப்பட்டமாக காப்பி அடித்தார்கள்! ஆனாலும், வழக்கமான வடக்கு – தெற்கு பாரபட்சங்களினால் இளையராஜாவை வடக்கத்திய இசையுலகம் போதுமளவுக்கு கொண்டாடவில்லை என்றே சொல்ல வேண்டும் ! தேசிய அளவிலான விருதுகளிலும் பாரபட்சம் காட்டப்பட்டது! சொல்லப் போனால், ஆறு முறை அவருக்குக் கிடைக்க வேண்டிய தேசிய விருதுகள் தட்டிப் பறிக்கப்பட்டது ! அது இந்த மண்ணுக்கே உண்டான குணக்கேடு !
சரி, நாம் நமது “மகாஞானி” யை மட்டும் கவனிபோம் !
சினிமா இசையில், தாள வாத்தியக் கருவிகளில் ஓர் ஒழுங்கு முறையைக் கொண்டு வந்தவர் இளையராஜாதான்.
தாள வாத்தியக்காரர்களுக்கென்று ஒரு தனிக் குணமுண்டு! அவர்களால் தொடர்ந்து ஒரு ஆவர்த்தனத்துக்கு மேல் ஒரே நடையை வாசிக்க முடியாது. தட்டி எடுப்பு, மீட்டி எடுப்பு என்று அவர்களை அறியாமலேயே அடுத்த நடைக்குக் அவர்களின் கரங்கள் போய் விடும் ! இளையராஜாவின் ரெக்கார்டிங்கில் அப்படியெல்லாம் மனம் போன போக்கில் உருட்டி வாசித்து விட முடியாது ! ஒரு நடையை ஃபிக்ஸ் செய்து விட்டார் என்றால், பாடலின் இறுதிவரை அதே நடைதான்.
ரிதம் ஒரே நடையில் சென்று கொண்டிருந்தாலும் கூட, அதன் மேல் மெலடியில் – ஹார்மனியில் விதவிதமான வாத்தியக் கருவிகளின் கோர்வைகளில் சளைக்காமல் தன் ஜாலங்களை நிகழ்த்திக் கொண்டிருப்பார் இளையராஜா.
தனது இசை வாழ்வில் இளையராஜா இதுகாறும் ஏறக்குறைய 5000 ஆயிரம் பாடல்களை தந்திருக்கிறார் !
இதை, ஏதோ “ஐயாயிரம் கத்திரிக்காய்களை விளைவித்திருக்கிறார்…” என்பது போல ஒரு கணக்காக, சர்வ சாதாரணமான செய்தி போல வாசித்துக் கடந்துவிட முடியாது ! அது அவ்வளவு லேசுப்பட்ட காரியமல்ல.
யோசித்துப் பாருங்கள்…
5000 ஆயிரம் பாடல்கள் என்றால்…..5000 பல்லவிகள் மற்றும் 5000 சரணங்கள் ! மேலும், ஒரு பாடலுக்கு மூன்று பிஜிஎம் (Back Ground Music) என்னும் கணக்கில்… 15 ஆயிரம் விதவிதமான இசைக் கோர்வைகள் !
பாடல்களுக்கு இடையிடையே வரும் இசைக் கோர்வைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் , புதுமையாகவும் இருந்தாக வேண்டும். இல்லையென்றால், சலித்து விடக் கூடும். ஆம், அப்போது வாரத்துக்கு ஒரு பாடல் என்னும் கணக்கில் இளையராஜா தன் படைப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார் !
ஒரு பாடலுக்கான மூன்று பிஜிஎம் களிலும் முதல் பிஜிஎம் மை அமைப்பதுதான் சவால். ஒரு பாடலை எப்படித் துவக்கிக் கொள்ள வேண்டும் என்னும் ரிஸ்க்கான விஷயம் அது !
புதுமையாக ஆரம்பிக்க வேண்டும், முந்தைய எந்தப் பாடலின் சாயலும் இருந்துவிடக் கூடாது, இசையை அறிந்து கேட்பவர்களுக்கு அதில் ஓர் எதிர்பாராத் தன்மை இருந்தாக வேண்டும், அந்தப் பாடலின் மூடுக்கு ஏற்ற வாத்தியக் கருவியாக அது இருக்க வேண்டும் இப்படி எத்தனை எத்தனையோ சவால்கள் ஒரு பிஜிஎம் முக்கு உண்டு ! ஆனால் அவையனைத்தையும் சர்வ சாதாரணமாக செய்து, கடந்து போனார் நம் இளையராஜா !
விதவிதமான ராகங்கள் – விதம் விதமான தாளங்கள் – விதம் விதமான குரல்கள் – ஸ்தாயிகள் – இசைக் கருவிகள் ! பாடல்களுக்கு மட்டும் இவ்வளவு.
இதுதவிர, பிண்ணனி இசைக் கோர்வை என்பது வேறு இருக்கிறது ! அது தனிச் சாதனை !
இதுகாறும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 1000 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒரு படத்தின் ஓட்ட நேரம் இரண்டரை மணி நேரம் ! எனில், 1000 x இரண்டரை மணி நேரம்.
அதாவது, சுமார் 2500 மணி நேரங்களுக்கு – வெவ்வேறு சூழ் நிலைகளுக்கு – வெவ்வேறு மன நிலைகளுக்கு – தனது பின்னணி இசையை வாசித்து… பல்லாயிரக் கணக்கான திரைப்படக் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் “மகா ஞானி” இளையராஜா !
படிப்பதற்கே, நமக்கு மூச்சு வாங்குகிறதல்லவா…?
( தொடரும்…)