புதுக்கோட்டை: 2மாதமாக சம்பளம் கொடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டை நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு  ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுக்கோட்டை நகராட்சியில் சுமார் 140 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் போடவில்லை என்று கூறப்படுகிறது.  கொரோனா முடக்கம் காரணமாக நகராட்சிக்கு போதிய வருமானம் இல்லாத நிலையில், சம்பளம் போடுவதற்குகூட பணம் வசூலாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதன் காரணமா கடந்த 2 மாதமாக சம்பளம் இல்லாமலேயே வேலை செய்துகொண்டிருக்கும், சுமார் 140 ஊழியர்கள், இன்று சம்பளம் கேட்டு நகராட்சி ஆணையர் அறையை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஊழியர்களை சமாதானப்படுத்திய ஆணையர் ஜகாங்கிர் பாட்ஷா , சம்பளம் கொடுக்கும் அளவுக்குக் கணக்கில் பணமில்லை. மேலே கேட்டிருக்கிறேன் பணம் வந்ததும் சம்பளம் கொடுப்போம் என்று கூறியுள்ளார்.
கடந்த  2 மாதம் சம்பளம் கொடுக்காததால், தங்களது  குடும்பங்கள் வறுமையில் வாடுது என்று கண்ணீர் வடிக்கும் ஊழியர்கள்,  வீட்டு வாடகை கொடுக்கக் கூட வசதி இல்லை என்று தெரிவித்து உள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்து, அங்கு  வந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆணையரிடம் பேசியிருக்கிறார். அவரிடமும் ஆணையர் பணமில்லாத காரணத்தினால்தான் சம்பளம் கொடுக்க முடியவில்லை. விரைவில் கொடுத்துவிடலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார்,ஊழியர்களிடம் சமாதானம் செய்து போராட்டத்தைக் கைவிடச் சொன்ன போது, ‘நாளை ஒரு நாள் பார்ப்போம்’ சம்பளம் தரவில்லை எனில்,நாளை மறுநாள் முதல் மீண்டும் போராடுவோம் என்று சொல்லி கலைந்து சென்றனர். வேலைகளை விரட்டி வாங்குவதுபோல சம்பளத்தையும்  குறிப்பிட்ட காலத்தில் கொடுக்க வேண்டியதும் அரசு மற்றும் அதிகாரிகளின் கடமைதானே.