கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிரியான கொரோனா வைரஸ், இன்று உலக நாடுகளையே வந்துபார் என்று சவால்விட்டு, அனைத்து தரப்பு மக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வைரஸின் தாக்கம் என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டிருப்போம்… ஒருவருக்கொருவர் சம்பிரதாயமாக கைக்குலுக்கக் கூட இன்று முடியவில்லை…
இப்படி ஒரு இக்கட்டான சூழல் உலகம் முழுவதும் நிலவும்போது, சாதாரண நோய்கள் உள்பட அவசர நோய்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த மருத்துவர்கள், மருத்துவமனைகள் முன்வரும்… சற்றே சிந்தித்து பார்க்க வேண்டும்…
தமிழகத்தில் கொரோனா பரவல் காலக்கட்டமான கடந்த 2 மாதத்தில், மூலைமுடுக்கெல்லாம் காணப்படும் கிளினிக்குகளையும் காணவில்லை.. அங்கு குவியும் நோயாளிகளையும் காணவில்லை…
விபத்து, நெஞ்சுவலி, அந்த வலி, இந்த வலி என அழைப்பு விடுப்பதும், அவர்களை தூக்கிக்கொண்டு ஓடும் 108 ஆம்புலன்சின் சைரன் ஒலிகூட கேட்கவில்லை… என்ன ஆனது.. நமது மக்களுக்கு…
யாருமே நோய்வாய்ப் படவில்லையா… அல்லது கொரோனா வைரஸ் அனைத்து நோய்களையும் விரட்டிவிட்டு, தான்தான் நோய்களின் ராஜா என கூறி விட்டதா? ஏதும் இல்லை…
மக்களிடையே எழுந்துள்ள உயிர்ப் பயம்.. ஆம்… பயம்… இந்த பயம் சாமானிய மக்களை மட்டுமல்லாது, மருத்துவர்களிடையேயும் ஏற்பட்டு உள்ளது… இதற்கு சான்றாக பல்வேறு நடவடிக்கைகள் ஆங்காங்கே மருத்துவமனைகளில் அரங்கேறி வருகின்றன…
காரணம், கொரோனா நோயாளி தவிர மற்ற நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சை அளிப்பதில் அரசு மருத்துவமனை மட்டுமல்ல பல தனியார் மருத்துவமனைகளிலும் மெத்தனம் காட்டப்படுகிறது… இது நோயாளிகளின் உயிர்களுக்கு ஆபத்தாக போய் விடுகிறது
இது ஒருபுறம் இருக்க கொரோனா பயம் காரணமாக பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் நோய்க்கு உரிய சிறப்பு மருத்துவர்கள் வருவதில்லை. ஜூனியர் மருத்துவர்களைக் கொண்டே, மருத்துவம் அளிக்கப்படுகிறது. (சில தனியார் மருத்துவமனைகள் தவிர) இதுமட்டுமின்றி, கொரோனா சோதனை, அது இது என தேவையற்ற பீதியை கிளப்பி, நோயாளிகள் யாரும் மருத்துவமனைக்கு வராதீர்கள் என்ற சூழலை உருவாக்கி விடுகிறார்கள். இதனால் நோயின் பாதிப்பு அதிகமாகி பலர் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டு வருகிறது.
மேலும், புற்றுநோய், டயாலிசிஸ், ஹார்ட் அட்டாக், நாள்பட்ட நோய்களுக்கான தொடர் சிகிச்சை போன்ற வற்றுக்கு வழக்கமாக வாரம் ஒருமுறை, 15நாட்களுக்கு ஒருமுறை, மாதம் ஒருமுறை என மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கொரோனா பீதியின் காரணமாக இதுபோன்ற சிகிச்சைக்குக் கூட அவர்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. மேலும் கொரோனா பீதி காரணமாக பலர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதைக்கூட தவிர்த்து வருகின்றனர்.
ஆனால், அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், மருத்துவமனை செல்வதை தவிர்க்க வேண்டாம்,அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பிரபல மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்…
பொறுப்புள்ள எந்தவொரு மருத்துவமனையும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பின்வாங்காது என்று தெரிவித்துள்ளார் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர், அவசர சிகிச்சையின் ஒவ்வொரு கட்டத்திலும் நோய்த்தொற்றுகள் பரவாதவாறு கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் – இது நோயாளிகளுக்கு மட்டுமல்ல, எங்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கும் கூட, என்று தெரிவித்து உள்ளார்.
பல நோயாளிகள் வழக்கமான சுகாதார ஆலோசனையிலிருந்து விலகி இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் வெளியே செல்ல மிகவும் பயப்படுகிறார்கள். ” ஆனால், அவர்கள் மருத்துவமனைக்கு வருவது பாதுகாப்பானது என்று கூறியவர், அதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளையும் விவரித்து உள்ளார்.
நீங்கள் ஒரு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தால், முதலில் இந்த மூன்று கேள்விகளைக் கேளுங்கள், மேலும் அவை ஒவ்வொன்றிற்கும் பதில் ‘ஆம்’ என்றால் மட்டுமே மருத்துவமனையில் நுழையுங்கள் என்று ஆலோசனை கூறுகிறார்…
- மருத்துவமனையின் அனைத்து நுழைவு வாயில்களிலும் தெர்மல் ஸ்கிரினிங் செய்யப்படுகிறதா?
- ஒவ்வொரு மருத்துவமனைக்குள்ளும், நோயாளிகளுக்கென தனித்தனி பாதுகாப்பான வார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளதா?
- அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா?
மேலே உள்ள 3 கேள்விகளுக்கும் சாதகமான பதில்கள் கிடைத்தால், நீங்கள் அந்த மருத்துவமனையில் தாராளமாக சிகிச்சை பெறலாம்…
ஏனென்றால், மருத்துவமனை வளாகத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நபரின் திரையிடலும் (தெர்மல் ஸ்கிரினிங்) மிக முக்கியமானது. நோய் அறிகுறிகள் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் கொரோனா சோதனைகளை நடத்த 24×7 மருத்துவ குழு தயாராக இருக்க வேண்டும். கை சுத்திகரிப்பான் (சானிடைசர்) அனைவருக்கும் அவசியம்.
மேலும், ஒவ்வொரு மருத்துவமனையிலும் பாதுகாப்பான மண்டலம் மற்றும் தனிமைப்படுத்தும் மண்டலம் இருக்க வேண்டும். நோயாளிகள் மற்றும் பணியாளர்களிடையே தேவையற்ற தொடர்பைக் குறைப்பது கட்டாயமாகும். மருத்துவமனை மருந்தகத்தில் கூட, எல்லா இடங்களிலும் கடுமையான உடல் தூரத்தை (சமூக விலகல்) பராமரிக்க வேண்டும்.
நோயாளிகளின் சேர்க்கை வார்டுகளும் அதற்கேற்ப பிரிக்கப்பட வேண்டும்.
கொரோனா தொற்று அல்லாத நோயாளிகள் சிகிச்சையைப் பெறும்போது கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு நோயாளியும், அவர் சிகிச்சை பெறும் பகுதிகளை கடக்கவோ அல்லது பகுதிகளைப் பகிர்ந்து கொள்ளவோ அனுமதிக்கக்கூடாது.
இது மட்டுமின்றி, மருத்துவமனையில் உள்ள அனைத்து முன்னணி மருத்துவ ஊழியர்களும் பிபிஇக்கள் (தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்) அணிய வேண்டும்,
கொரோனா அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளுக்கு நடைமுறைகளை மேற்கொள்ளும் முக்கியமான பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்கள் 100% வடிகட்டப்பட்ட காற்றை உருவாக்கும் சுத்திகரிப்பு சுவாசக் கருவிகள் போன்ற கூடுதல் பாதுகாப்பு உபகரணங்கள் அணிய வேண்டும்.
இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் பின்பற்றப்பட வேண்டியது மிக அவசியம்.
ஆனால், நாம் அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும்போது, இதுபோன்ற நடைமுறைகளை மருத்துவமனைகள் கடைபிடிக்கிறதா என்பதை அவ்வளவு எளிதாக கண்டுகொள்ள முடியாது.
நாள்பட்ட நோயாளிகள், தொடர் சிகிச்சை பெற்றும் நோயாளிகளின் குடும்பத்தினர், அவசர தேவைகளை கருத்தில்கொண்டு, அருகே உள்ள மருத்துவமனைகளின் செயல்பாடுகளை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்…
ஏனென்றால், கொரோனா தொற்றின் அச்சம், வயதான மற்றும் நாட்பட்ட பல இருதய நோயாளிகள், நீரழிவு நோயாளிகளுக்கு பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
“5 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இருதய நோயாளி ஒருவர், வழக்கமான பரிசோதனைக்காக பிரபல மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தும், கொரோனா காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன், இதனால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, சோர்வு மற்றும் மயக்கம் வருவதுபோல உணர்கிறேன் என்று புலம்புகிறார்.
இருந்தாலும், பல தனியார் மருத்துவமனைகள் திறமையான சிகிச்சைகள் வழங்கிக்கொண்டுதான் வருகின்றன. அதனால், பொதுமக்கள், கொரோனா பீதி காரணமாக, வழக்கமான சிகிச்சை மேற்கொள்வதில் இருந்தோ, அவசர சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதை தவிர்ப்பதோ சரியான நடைமுறை அன்று…
ஒவ்வொருவரும், உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய பாரம்பரியமான உணவுகளை உட்கொண்டு, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் வெற்றி பெறுங்கள்… கொரோனா பீதியில் இருந்து வெளியே வாருங்கள் மக்களே…
ஆரோக்கியமே அழகு…