சென்னை,

தற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டமே நிரந்தர தீர்வுதான் என்று தமிழக முதல்வர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். இந்த அவசர சட்டம் தேவையில்லை.. எங்களுக்கு நிரந்தர சட்டம்தான் தேவை என இளைஞர்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் தமிழக முதல்வர் இதுகுறித்து அறிவித்து உள்ளார். அவசர சட்டம் பற்றி அச்சப்படத் தேவையில்லை. ஜல்லிக்கட்டு அவசர சட்டமே நிரந்தரத் தீர்வுதான் என்று முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது, ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறேன். அவசர சட்டம் பற்றி அச்சப்படத் தேவையில்லை. ஜல்லிக்கட்டு அவசர சட்டம் 6 மாதத்துக்கு நடைமுறையில் இருக்கும். வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரையில் அவசர சட்டமே நிரந்தர தீர்வுதான். அறவழியில் போராடிய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், மக்களுக்கும் நன்றி” என்று முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.