ருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்தள்ளது.

திருக்கடையூரில் எமனை சம்ஹாரம் செய்த “கால சம்ஹாரமூர்த்தி’யாக அருளும் சிவன், இத்தலத்தில் “அனுக்கிரமூர்த்தி’யாக இந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.

ஆயுள் விருத்தி பெறவும், சனிதோஷம் நீங்கவும் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இங்கு ஆயுஷ்ய ஹோமம், அறுபது, எண்பதாம் திருமணம் செய்துகொண்டால் ஆயுள் நீடிக்கும் என்பது நம்பிக்கை. மாசிமகத்தன்று சிவனின் அம்சமான, முருகனே அவரது சார்பில் தீர்த்தத்திற்கு எழுந்தருளுகிறார். கார்த்திகை கடைசி திங்கள்கிழமையன்று இவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது சிறப்பு.

அம்பாள் சொர்ணகுஜாம்பிகைக்கு, இரண்டு கரங்களுடன் தனிச்சன்னதியில் இருக்கிறாள். திருமண, புத்திரதோஷம் உள்ளவர்கள் இவளது சன்னதியில் தாலி, வளையல் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷம் நிவர்த்தியவதாக நம்பிக்கை.

மார்கழியில் பைரவாஷ்டமி, புரட்டாசியில் துர்க்காஷ்டமியன்று பைரவருக்கு விசேஷ ஹோமம் மற்றும் பூஜைகள் நடக்கிறது.

சிவபக்தனான மார்க்கண்டேயர், அற்ப ஆயுளில் உயிர் பிரியும்படியான வரம் பெற்றிருந்தார். அவரது இறுதிக் காலத்தில் எமதர்மன், அவரது உயிரை எடுக்க வந்தார். அப்போது மார்க்கண்டேயர், சிவத்தலங்களுக்கு யாத்திரை சென்றார்.

திருக்கடையூர் தலத்திற்கு அவர் சென்றபோது, எமன் பாசக்கயிறை வீசினான். அவ்வேளையில் அவர், சிவபெருமானை தழுவிக்கொள்ளவே பாசக்கயிறு லிங்கத்தின் மீது விழுந்தது. பணியை சரியாக செய்யாத எமதர்மனை, சிவபெருமான் இடது காலால் எட்டி உதைத்தார்.

தவறை உணர்ந்த எமன், தான் விழுந்த இடத்தில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து, தவறுக்கு மன்னிப்பு வேண்டி வழிபட்டார். அதன்பின்பு சிவன், அவருக்கு மீண்டும் பதவியைக் கொடுத்தார். பின்பு எமன் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். எமனின் பெயரால் “எமனேஸ்வரமுடையார்’ என்றும் அழைக்கப்பட்டார்.

இழந்த பதவி, செல்வங்களை மீட்க எமனேஸ்வரமுடையாரையும், பிணி நீங்க பைரவரையும் வழிபடுகிறார்கள்.