சான்பிரான்சிஸ்கோ: டிவிட்டர் சமூக இணையதளத்தை கையகப்படுத்தி உள்ள எலன்மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில், டிவிட்டரில் பணியாற்றும் ஊழியர்கள் வாரம் 80மணி நேரம் வேலை செய்ய வேண்டும்  என்று உத்தரவிட்ட உள்ளதுடன், இலவச உணவு உள்பட எந்தவொரு  சலுகையும் கிடையாது என்று அறிவித்து உள்ளார். இது டிவிட்டர் ஊழியர்களிடையே கடும் அதிப்தியை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலன்மஸ்க் ஏற்கனவே டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேக்ஸ் எக்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் என பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் சமீபத்தில் டிவிட்டரை முழுமையாக கையப்படுத்தினார். இதைத்தொடர்ந்து, முதலாவதாக இந்தியாவைச் சேர்ந்த தலைமை அதிகாரிகளை நீக்கி நடவடிக்கை எடத்தார். மேலும், தற்போதுள்ள ஊழியர்களில் 75 சதவிகிதம் குறைக்கப்போவதாக தெரிவித்து உள்ளார்.  தொடர்ந்து டிவிட்டர் நிறுவனத்தில்  பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள், முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் என ட்விட்டரின் மொத்த ஊழியர்களில் பாதி பேர் (50%) வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். அவரது நடவடிக்கை உலக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், டிவிட்டர் பயனர்களின் ‘புளுடிக்’ பெற 8 டாலர் கட்டணம் அறிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இந்த  நிலையில், தற்போது, டிவிட்டர் ஊழியர்கள் வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும். (அதாவது நாள் ஒன்றுக்கு 8மணி நேரம் வேலை என்றால், 10 நாள் வேலையை 6 நாளில் செய்ய வேண்டும் – ஒருவர் குறைந்தபட்சம் 13 நேரம் பணியாற்ற வேண்டும்) அலுவலகத்தில் இலவசமாக உணவு போன்ற எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாது. பெருந்தொற்று காலமெல்லாம் முடிந்துவிட்டது. அதனால், இனி எந்த ஊழியருக்கும் வீட்டிலிருந்து பணி புரியும் சலுகை இல்லவே இல்லை. இதெற்கெல்லாம் ஒப்புக் கொண்டால் வேலைக்கு வரலாம். இல்லாவிட்டால் வீட்டிலேயே இருக்கலாம். ராஜினாமாக்களை நாங்கள் தாராளமாக ஏற்றுக் கொள்வோம் என்று அறிவித்து உள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், இதுவரை  சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இந்தியாவில் 200 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் 180-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணியில் தொடர்ந்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 70% வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள்.

எலன்மஸ்க்கின் நடவடிக்கையால், டிவிட்டர் திவாலாகும் வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.