ட்விட்டர் நிறுவன நிர்வாகம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கைமாறியது முதல் பல்வேறு மாற்றங்களை அறிவித்து வந்தார் அதன் புதிய உரிமையாளர் எலன் மஸ்க்.

7500 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய கையோடு தினமும் 32 கோடி ரூபாய் இழப்பை சந்தித்து வரும் நிறுவனத்தின் வருமானத்தை ட்விட்டர் சந்தா வருமானம் மூலம் ஈடுகட்ட வேண்டும் என்று ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

அதற்காக ட்விட்டர் ப்ளூ டிக் பயனர்களுக்கு மாதம் 8$ (ரூ. 719) கட்டணம் நிர்ணயித்ததோடு பணத்தை தவிர வேறு எந்த ஆவணமும் தேவையில்லை ஐபோன் வைத்திருப்பவர்களுக்கு முதலில் இதை செயல்படுத்துங்கள் என்று கூறினார்.

எந்த வித சோதனையும் இல்லாமல் ப்ளூ டிக் வழங்கப்பட்டதை அடுத்து இயேசு கிறிஸ்து முதல் ட்விட்டர் உரிமையாளர் எலன் மஸ்க் வரை அனைத்து பெயரிலும் போலி கணக்குகள் துவங்கப்பட்டு அதற்கு ப்ளூ டிக் வாங்கப்பட்டது.

https://twitter.com/LillyPad/status/1590813806275469333

“இன்று முதல் இன்சுலின் இலவசமாக வழங்கப்படும்” என்று அமெரிக்க மருந்து நிறுவனத்தின் பெயரில் போலியான பதிவு துவங்கி எலன் மஸ்க்-கின் மற்றொரு நிறுவனமான டெஸ்லா பெயரில் 9/11 தீவிரவாத தாக்குதல் தொடர்பான பதிவு வரை நூற்றுக்கணக்கான போலி பதிவுகளால் திணறிய ட்விட்டரில் பிரபல பத்திரிக்கை நிறுவனங்கள் மற்றும் நிருபர்கள் பெயரிலும் போலி பதிவுகள் பதிவிடப்பட்டது.

இதனை அடுத்து ப்ளூ டிக் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்தது. மேலும் போலி பதிவுகளை நீக்குவதில் கவனம் செலுத்த தொடங்கியது.

இந்த நிலையில் எலன் மஸ்க்-கின் செயல்பாடுகளில் திருப்தியில்லாத ஊழியர்கள் அந்நிறுவனத்தை விட்டு வெளியேற துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மஸ்க் இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் ஒரே ஆண்டில் ட்விட்டர் நிறுவனம் திவால் நிலைக்கு வந்துவிடும் என்று தனக்கே உரிய பாணியில் கூறியுள்ளார்.

இருந்தபோதும், தீவிரவாதம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கக் கூடிய பதிவுகளை அனுமதிக்கக்கூடிய வகையில் ப்ளூ டிக் வழங்கி வரும் நிறுவனத்தின் முடிவில் எந்தவிதமான மாற்றத்தை கொண்டுவருவார் என்பது குறித்து ட்விட்டர் மூலம் தகவல் தெரிந்துவந்த கோடிக்கணக்கான மக்கள் குழம்பிபோயுள்ளனர்.

எலன் மஸ்க் கையில் சிக்கியுள்ள ட்விட்டர் நிறுவனம் இனி நம்பகமான தளமாக விளங்குமா என்பது குறித்தும் இந்த ப்ளூ டிக் நடவடிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.