சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்குத் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அதற்காக அமைக்கப்பட்டுள்ள தேடல் குழு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே பல்கலைக் துணைவேந்தராக உள்ள சுதா சேஷையனின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய அறிவிப்பாணை வெளியாகி உள்ளது.
சென்னை கிண்டியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்த சுதா சேஷையன் அவர்களின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 30ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதனையடுத்து துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. இந்த பணியிடத்தை நிரப்புவதற்காக, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய கடந்த ஜனவரி முதல் வாரத்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்புராஜ் தலைமையில் தேடல் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் தற்போது அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
அதன்படி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தகுதியுள்ள கல்வியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தேடல் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்யும். இதற்கான சட்ட மசோதா கடந்த ஆண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நியமனம் கவனரால் நியமிக்கப்பட வேண்டும் என்பது அரசியல் சாசனத்தின் விதியாகும்.