சென்னை: “தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழக துணைவேந்ர் சுதாசேஷய்யன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம் செய்யப்படுவதாக துணைவேந்தர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தகுதிச் சான்றிதழுக்கான (Eligibility Certificate) கட்டணங்கள் ஒருமைப்படுத்தப்படுவதாலும் மாணவர்கள் விண்ணப்பிக்கிற முறைகள் எளிமைப் படுத்தப்படுவதாலும் தொழில்நுட்ப மாற்றங்களைப் பல்கலைக்கழகம் செய்து வருகிறது. சீராய்வுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனால் தகுதிச் சான்றிதழுக்கான தொழில்நுட்ப நுழைவுகள் (Eligibility Certificate Application portal) தற்காலிகமாக மூடப்படுகின்றன. தகுதிச் சான்றிதழ் தேவைப்படுகிற மாணவர்கள், சில நாட்கள் பொறுத்திருந்து, பின்னர் விண்ணப்பிக்கும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
செப்டம்பர் 15-ந் தேதிக்குப் பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அன்பு வேண்டுகோள்: ‘யாரும் பதைபதைக்க வேண்டாம்’, எல்லோருடைய விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும். இந்த நிறுத்தம் தற்காலிகமானது மட்டுமே.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.