டெல்லி: எல்கர் பரிஷத் வழக்கில்,பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் (உபா சட்டம்) கைது செய்யப்பட்டிருந்த 84வயது சமூக செயற்பாட்டாளார் ஸ்டேன் ஸ்வாமி காலமானார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் திருச்சியை சேர்ந்த சமூக  செயற்பாட்டாளரான ஸ்டேன் ஸ்வாமி உள்பட  குற்றம் சாட்டப்பட்டவர்கள் மும்பைக்கு அருகிலுள்ள, சுகாதார வசதிகளற்ற  தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டடு, மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.

காராஷ்டிரா மாநிலம் பீமா கோரேகானில் பேஷ்வா படையினருக்கும் பட்டியல் இன மக்கள் படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் பட்டியில் இன மக்கள் வெற்றி பெற்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த வெற்றி நிகழ்வை பட்டியல் இன மக்கள் பெரும் விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்வின் 200வது ஆண்டையொட்டி கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி ’எல்கர் பரிஷத்’ மாநாடு  புனே அருகே உள்ள சனிவர்வாடா கோட்டையில்  நடைபெற்றது. இதைத்தொடர்ந்து,  அடுத்த நாள் (2018ம் ஆண்டு) ஜனவரி 1 ஆம் தேதி  எதிர்பாராவிதமாக பெரிய கலவரம் வெடித்தது.  இதுதொடர்பாகது விசாரணை நடத்திய புனே காவல் துறை,  எல்கர் பரிஷத் பகுதியில் வன்முறை தூண்டும் வகையில் சிலர் பேசியதாலேயே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாகக் கூறி, ஸ்டேன் ஸ்வாமி. சுதிர் தவாலே, கவிஞர் வரவர ராவ், ரோனா வில்சன் உள்ளிட்ட ஒன்பது சமூக செயற்பாட்டாளர்கள் மீது சட்டப்பிரிவு 124 ஏ (தேச துரோகம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு  புனே காவல் துறையிடமிருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, கவுதம் நவலாகா, ஆனந்த் டெல்டும்ப்டே ஆகிய எழுத்தாளர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டட 11 பேரும்  சுகாதார வசதிகளற்ற  தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பாக அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.  மருத்துவ உதவி, சோதனைகள், சுகாதாரம் மற்றும் சமூக தூரத்தை உறுதி செய்வதில் சிறை அதிகாரிகளால் புறக்கணிக்கப்பட்டதாக அவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்ட ஸ்டான் சுவாமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காலில் விலங்குடன் சிறைச்சாலையில் ஸ்டேன் ஸ்வாமி

முன்னதாக, மும்பையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்டான் சுவாமி, மே 28 அன்று நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து மும்பையில் உள்ள புனித குடும்ப மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியானது. அதனால் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் உயிரிழந்து விட்டதாக, மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக ஜார்க்கண்டில் பழங்குடியினருக்காக பணியாற்றிய சமூக செயற்பாட்டாளரான ஸ்டேன் சுவாமி, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நக்சல்களுடன், குறிப்பாக தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்டுகள்) உடன் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில்வ அடைக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..