புதுச்சேரி: புதுச்சேரியில், சமீபத்தில் இறந்த கோவில் யானையான லட்சுமியின் பெயரில் சிறிய யானை சிலையை ஒரு தரப்பினர் வைத்து வழிபாடு நடத்தினர். இதையறிந்த மாநில அரசு காவல்துறை மூலம் அந்த சிலையை அகற்றினர். அப்போது, அந்த யானையை சிலையை ஒரு பெண் கட்டிப்பிடித்துக்கொண்டு காவல்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பபு தெரிவித்து கண்ணீர் விட்டார். இதையடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்தி சிலையை அகற்றினர்.

புதுச்சேரியில் உள்ள பிரபலமான மணக்குள விநாயகர் கோவிலில் பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த லட்சுமி என்ற யானை, அம்மாநில மக்களின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்தது. இது கடந்த மாதம் (நவம்பர்) 30-ந் தேதி காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. இது பக்தர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து,  வனத்துறை அலுவலகம் அருகே யானை லட்சுமி உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடை யானை லட்சுமியின் நினைவாக அது உயிரிழந்த இடமான மிஷின்வீதி கலவை கல்லூரியையொட்டி உள்ள காமாட்சியம்மன் கோவில் வீதியில் கடந்த 2-ந் தேதி திடீரென அரசு அனுமதியின்றி சிறிய யானை சிலை வைக்கப்பட்டு  அந்த சிலைக்கு பிரதிஷ்டையும் செய்து, பூஜைகள் நடத்தினர்.

தகவலறிந்த சட்டம்-ஒழுங்கு போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பொது இடத்தில் அனுமதியின்றி சிலை வைக்க கூடாது. இங்கு சிலை வைப்பதற்கு அனுமதி இல்லை என போலீசார் கூறினர். அப்போது விரைவில் சிலையை எடுத்து விடுவதாக சிலையை வைத்தவர்கள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் 10 நாட்களுக்கு மேலாகியும் சிலை எடுக்கபடாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்துவதறகாக வந்தனர். மேலும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் மற்றும் இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார் என 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இதுபற்றி அறிந்த அந்த பகுதி  பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். சிலையை அங்கிருந்து அகற்றகூடாது என நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலையை அகற்றுவதற்கு கொண்டு வரப்பட்ட பொக்லைன் எந்திரம் மீது சிலர் கற்களை வீசினர்.

இதையடுத்து பொதுமக்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் யானை சிலையை அகற்றி நகராட்சி அதிகாரிகள் கொண்டு சென்றனர். அப்போது பெண் ஒருவர் யானை சிலையை கட்டிப்பிடித்து அங்கிருந்து எடுத்து செல்ல வேண்டாம் என்று கதறி அழுதார். அவரை பெண் போலீசார் சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர்.

நள்ளிரவு நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.