புதுடெல்லி: ஆஃப்ரிக்க கண்டத்தில் உள்ள போட்ஸ்வானா நாட்டில் யானை ஒன்று தந்தங்களுக்காக கொடூரமான முறையில் வேட்டையாடப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தங்களுக்காக சட்டவிரோதமாக யானைகளை வேட்டையாடுவது உலகமெங்கிலும் தொடர்ச்சியாக நடந்துவரும் சம்பவமாக இருந்தாலும், ஆஃப்ரிக்காவில் அந்த வேட்டை நிகழ்வுகள் மிக அதிகம்.
அப்படி ஒரு சம்பவம்தான் போட்ஸ்வானா நாட்டில் நிகழ்ந்துள்ளது. அந்நாட்டில் நடைமுறையில் இருந்த வேட்டையாடும் தடைச்சட்டம் சமீபத்தில் நீக்கப்பட்டது. இதனையடுத்து யானை வேட்டைகளை முன்பைவிட இன்னும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தனியார் நிறுவனம் ஒன்றுக்காக ஆவணப் படம் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஜஸ்டின் சுலிவான் என்பவர், போட்ஸ்வானா காட்டுப் பகுதியில் தனது டிரோனை பறக்கவிட்டார்.
அந்த டிரோன் கேமராவில், யானை ஒன்று தந்தங்களுக்காக கொடூரமான முறையில் முகம் சிதைக்கப்பட்டு, வேட்டையாடப்பட்டு இறந்து கிடந்த காட்சி பதிவானது. அந்தக் காட்சி தற்போது சமூகவலைதளங்களில் பரவி, உலகெங்கிலும் வைரலாகி வருகிறது.