சென்னை

புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் மின் கணக்கீடு செய்ய இயலாது என்பதால் அக்டோபர் மாதக் கணக்கீட்டின்படி மின்கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜம் புயல் காரணமாகக் கனமழை பெய்தது.  அதனால் பல குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

மேலும் மழை வெள்ளத்தால் பொதுமக்களின் வாகனங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதமடைந்தன.  புயல் காரணமாக அபராதமின்றி மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு 18-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மின் கணக்கீடு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  எனவே டிசம்பர் மாதம் மின் கணக்கீடு செய்யாத நுகர்வோருக்கு அக்டோபர் மாத கணக்கீட்டின்படி மின் கட்டணம் வசூலிக்க மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Cyclone, Electricity charges, October month,