கோவை: சின்னவேடம்பட்டியில் உள்ள பூங்காவில் மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் உயிரிழந்தது. மின்வாரியம் மற்றும் குடியிருப்பு வாசிகளின் மெத்தனத்தால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சரவணம்பட்டி  அருகே உள்ள ராணுவ வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பூங்காவில் விளையாடிய போது மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டது.  இந்த  மின் விபத்தில் ஜியான்ஸ்ரெட்டி (6), வியோமா பிரியா (8) உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இது அங்குள்ளவர்களியே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சரவணம்பட்டி – துடியலூர் சாலையில் ராணுவ வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் அவர்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரின் மூத்த மகன் ஜியான்ஸ் ரெட்டி (6), பாலச்சந்தர் என்பவரின் மகள் பிரியா (8) ஆகிய இரு குழந்தைகளும் நேற்று மாலை அங்குள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மிதமான மழையும் பெய்து கொண்டிருந்தது

சறுக்கு விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சேதமடைந்து தொங்கி கொண்டு இருந்த மின் வயரில் இருந்து மின்சாரம் தாக்கி குழந்தைகள் ஜியான்ஸ் ரெட்டி, பிரியா ஆகிய இருவரும் மயக்கமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, குழந்தைகள் இருவரையும் மீட்டு,  அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர்களை சோதித்துப் பார்த்து, இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.

இதையடுத்து குழந்தைகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்கசிவு குறித்து ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தும், மின்சார வாரியமும், அந்த  குடியிருப்பு கூட்டமைப்பு நிர்வாகிகளும்  எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.