கொடுங்கையூர்,
மழை காரணமாக மின்சாரம் தாக்க உயிரிழந்த குழந்தைகளுக்கு அனுதாபம் செலுத்த சென்ற அமைச்சர் ஜெயக்குமாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சென்னையில் கடந்த 3 நாளாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தெருவெங்கும் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில் நேற்று கடைக்கு சென்ற சிறுமிகள் தண்ணீரில் உள்ள பள்ளம் காரணமாக கீழே விழுந்ததால், அருகில் உள்ள மின்சார கேபிளை பிடித்து எழுந்திருக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோக செயலுக்கு தமிழக அனைத்து கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர்.
இதையடுத்து, இதற்கு காரணமான மின்வாரிய ஊழியர்கள் பலரை சஸ்பெண்டு செய்துள்ளதாகவும், உயிரிழந்த சிறுமிகள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.
அதையடுத்து உயிரிழந்த குழந்தைகளின் உடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இன்று அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்த சிறுமிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கொடுங்கையூர் வந்தார். அப்போது அவரை பொதுமக்கள் சுற்று வளைத்து முற்கையிட்டனர்.
சிறுமிகள் பலியானதற்கு மின்சார வாரியமே காரணம் என்றும், இதுபோன்று மின் கேபிள்கள் மற்றும் மின்சார பெட்டிகள் பாதுகாப்பின்றி இருப்பதாகவும், அவைகளை உடனே சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
உயிரிழந்த சிறுமிகளின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. பணியில் ஊழியர்கள் அலட்சியம் காட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. சிறுமிகள் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுளளனர்.
அரசுத் துறைகளில் கவனக்குறைவு என்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.