தாம்பரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 2 முதல் நிறுத்திவைக்கப்பட்ட மின்சார ரயில் இன்று முதல் மீண்டும் துவங்கியது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் 8 நடைமேடைகள் இருந்து வந்த நிலையில் மேலும் இரண்டு நடைமேடைகள் அமைக்கவும், தண்டவாளங்களை சீரமைக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடந்து வந்தன.

இதனால், சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் பல்லாவரத்துடன் நிறுத்தப்பட்டன. செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்கமாக சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தப்பட்டன.

தவிர, தாம்பரத்தில் இருந்து புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்படும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது, அதேபோல் எழும்பூரில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் தாம்பரத்தில் நிற்காமல் சென்றது.

ரயில் போக்குவரத்தில் செய்யப்பட்ட இந்த மாற்றத்தால் தாம்பரத்தில் இருந்து சொற்ப ரயில்களே இயக்கப்பட்டதை அடுத்து பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் முதல் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கம் போல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதேவேளையில், தாம்பரம் ரயில்நிலைய பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் குறைந்த காலத்தில் நிறைவேற்றப்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.