சென்னை: மின்சார ரயில் சேவை குறைப்பு எதிரொலியால், கூடுதலாக 50பேருந்துகளை இயக்குவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

எழும்பூர் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால், 20ந்தேதி முதல் 45 நாட்களுக்கு மின்சார ரயில் வந்து செல்லும் பிளாம்பாரம் மாற்றப்பட்டு உள்ளதுடன் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 50 பேருந்துகளை இயக்குவதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, மாநகர் போக்குவரத்து கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் வரும் பிப். 20 முதல் ஏப்ரல் 5 வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்து கழகம் தற்போது ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் தடம் எண். இ18-ல் 16 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண். 18ஏ-ல் 28 பேருந்துகள் என 44 பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிப்.20 முதல் ஏப்.5ம் தேதி வரை ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 35 பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையும், பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் என மொத்தம் 50 பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
பயணிகள் கவனத்திற்கு: 20ந்தேதி முதல் எழும்பூரில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் பிளாட்பாரம் மாற்றம்!
[youtube-feed feed=1]