என். சொக்கன்
2
‘எனக்கு ஒண்ணும் தெரியாது, இனிமே உன் பாடு, அவன் பாடு.’
இந்த வாசகத்தில் ‘பாடு’ என்றால் நிலை அல்லது பொறுப்பு என்று பொருள். ‘நீங்க ரெண்டுபேரும் என்னவோ செஞ்சுக்கோங்க, அது உங்க பிரச்னை’ என்று பொருள்கொள்ளலாம்.
‘பாடு’ என்ற சொல்லுக்கு அகராதியில் பல பொருள்கள் இருக்கின்றன. அநேகமாக எல்லாமே இன்றைக்கும் பயன்பாட்டில் இருப்பவைதான்.
உதாரணமாக, ‘பாடு’ என்பது ஒரு வினைச்சொல், கட்டளைச்சொல், ‘ஒரு பாட்டுப் பாடு’ என்பதுபோல.
இதே சொல்லை, ‘படுதல்’ என்ற வினைச்சொல்லிலிருந்து வரவழைக்கலாம், அப்போது அது அனுபவித்தல் என்ற பொருளில் வருகிறது. ‘அவனுக்கு உதவி செய்யப்போய் நான் பட்ட பாடு கொஞ்சநஞ்சமா!’
இதைக் கஷ்டம் அனுபவித்தல் என்ற பொருளில்மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை, ‘ஒழுங்காய்ப் பாடுபடு வயற்காட்டில், உயரும் உன்மதிப்பு வெளிநாட்டில்’ என்று மருதகாசி எழுதினார். இங்கே ‘பாடுபடுதல்’ என்றால் உடலளவில் சிரமம் அனுபவித்து உழைத்தல் என்ற பொருள் அமைகிறது.
எங்கெல்லாம் ‘படுதல்’ என்ற சொல் வருகிறதோ, அங்கெல்லாம் ‘பாடு’ என்ற சொல்லையும் வரவழைக்கலாம், கட்டுப்படுதல்=>கட்டுப்பாடு, கட்சித்தலைமைக்குக் (அல்லது மக்களுக்குக்) கட்டுப்படும் தொண்டர்களுடைய குணம், கட்டுப்பாடு.
இதேபோல், தட்டுப்படுதல்=>தட்டுப்பாடு, சிரமப்படுதல்=>சிரமப்பாடு, உறுதிப்படுதல்=>உறுதிப்பாடு, வசப்படுதல்=>வசப்பாடு, பண்படுதல்=>பண்பாடு என்று பல சொற்களைச் சொல்லலாம்.
இரு கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது என்கிறோமே, அந்தச்சொல்லும் இந்தக் குடும்பம்தான், உடன்படுதல்=>உடன்பாடு.
ஒரு கச்சேரியில் இரு பாடகர்களிடையே சண்டையாம், யார் முதலில் பாடுவது என்று போட்டிபோட்டார்களாம். அவர்களுக்கிடையே சமாதானம் செய்துவைத்த மூன்றாவது பாடகர், ‘நான் முதலில் பாடுகிறேன், நீங்கள் இருவரும் உடன்பாடுங்கள்’ என்று அவர்களிடையே  ஓர் உடன்பாடு’ செய்துவைத்தாராம்.
(தொடரும்)