தேர்தல் தமிழ்: கூட்டம்

Must read

என். சொக்கன்
a
தலைவர் பேசுவதைக் கேட்கப் பெரிய கூட்டம் வந்தது.
தமிழ்ச் சொற்களின் நிறைவாக அமையும் பாகத்தை ‘விகுதி’ என்பார்கள். உதாரணமாக, கூட்டம் என்பது ‘அம்’ என்ற விகுதியைக்கொண்டு நிறைவடைகிறம்.
‘அம்’ விகுதிக்கு அமைப்பு என்ற பொருள் உண்டு. உண்மையில் அமை/அமைதல்/அமைப்பு போன்ற சொற்களும் இந்த வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தவைதான் என்பார்கள்.
ஆகவே, கூட்டம் என்பது, கூடுகின்ற அமைப்பு, ஆட்டம் என்பது, ஆடுகின்ற அமைப்பு, நாட்டம் என்பது நாடுகின்ற அமைப்பு.
இங்கே ‘அமைப்பு’ என்பதற்கு ஒரு நிறுவனம், கட்டடம் என்பதுபோல் பொருள்கொண்டால் குழப்பிவிடும். தட்டு என்பது சாப்பிடுவதற்கான ஓர் அமைப்பு என்பதுபோல் புரிந்துகொள்ளலாம்.
இந்த விகுதியை இன்னொருவிதமாகவும் பயன்படுத்துவார்கள். உண்டனம் என்றால், சாப்பிட்டோம் என்று பொருள். தந்தனம் என்றால், தந்தோம் என்று பொருள். வந்தனம் என்றால், வந்தோம் என்று பொருள், வாருங்கள் என்று வரவேற்பதாகவும் இன்னொரு பொருள்.
‘அம்’ என்பதன் இன்னொரு பொருள், அழகு. ‘அம்பூ’ என்றால், நீளமான அம்பு அல்ல, அழகான மலர்.
அங்கயற்கண்ணி என்ற தெய்வத்தின் பெயர் அம்+கயல்+கண்ணி என்று பிரியும். அதாவது, அழகிய, மீன்போன்ற கண்களையுடையவள்!
அ, இ, உ மூன்றும் சுட்டெழுத்துகள் என்பதால், ‘ம’ குடும்பத்தில் தொடங்கும் சொற்களைச் சுட்டுவதற்கும் ‘அம்’ என்பதைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, ‘அம்மகள்’ என்றால், அந்த மகள், ‘அம்மிளகாய்’ என்றால், அந்த மிளகாய்.
‘அம்மனை அருகிலுள்ள கோயிலில் அம்மனைப் பார்த்தேன்’ என்றால், அந்த வீட்டுமனைக்குப் பக்கத்திலிருக்கும் அம்மன் கோயிலில் தெய்வத்தைத் தரிசித்தேன் என்று பொருள்!
(தொடரும்)

More articles

Latest article