என். சொக்கன்
SansadBhavan_dtv
இன்றைக்கு அனைத்து இந்திய மாநிலங்களிலும் சட்டமன்றங்கள் இருக்கின்றன. இந்த மன்றங்களில் உள்ளோர் அந்த மாநிலத்துக்கான சட்டங்களை இயற்றுகிறார்கள். கூடுதலாக, தேசிய அளவிலான சட்டங்களை இயற்றிச் செயல்படுத்துகிற ஒரு மன்றமும் உள்ளது. அதனைப் ‘பாராளுமன்றம்’ என்கிறோம்.
‘சட்டமன்றம்’ என்ற பெயர், சட்டங்களை வகுக்கிற மன்றம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. முதன்முதலாக 1861ல்தான் மாநிலச்சட்டமன்றங்கள் உருவாக்கப்பட்டன.
‘பாராளுமன்றம்’ என்பது, ‘பார்ஆளும்மன்றம்’ என்று பிரிகிறது. அதாவது பாரினை, உலகத்தினை ஆளுகின்ற மன்றம்.
‘பார்’ என்பது பொதுவாக உலகம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. ‘பாருக்குள்ளே நல்ல நாடு, எங்கள் பாரதநாடு’ என்கிற பாரதியார் பாடல் எல்லாருக்கும் தெரிந்ததுதான்.
ஆனால் உண்மையில், ‘பார்’ என்பதன் பொருள், நிலம் என்பதுதான். திருவருட்பாவில் வள்ளலார் இப்படி எழுதுவார்:
‘பாரொடு நீர், கனல், காற்று, ஆகாயம்எனும் பூதப்பகுதி’
அதாவது, ஐம்பெரும்பூதங்களாக வர்ணிக்கப்படும் நிலம்,  நீர், நெருப்பு, காற்று,  ஆகாயம் ஆகியவற்றில் நிலம்தான் பார்.  அந்த நிலத்தில் உள்ள நாடுகளிலேயே சிறந்தது இந்தியா என்று பெருமிதப்படுகிறார் பாரதியார்.
ஆக, ‘பாராளுமன்றம்’ என்றால் ஒரு பெரிய நிலத்தை ஆளும் மன்றம், இங்கே அது தேசத்தைக் குறிக்கிறது. ‘பார்வேந்தன்’ என்றாலும் இதே பொருள்தான்.
பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் இரு பிரிவுகள் இருக்கலாம்: மேலவை, கீழவை. இதில் பலதுறை நிபுணர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும்  இடம்பெறுவார்கள், இவர்கள் அனைவரும் சேர்ந்து எடுக்கிற தீர்மானங்கள்தான் அந்த மன்றத்தின் தீர்மானமாக முன்வைக்கப்படும்.
‘பார்’ என்பதைக் கட்டளைச்சொல்லாகவும் பயன்படுத்தலாம், ‘இதோ பார், இந்தப் பார் எத்துணை அழகானது!’
(தொடரும்)