தேர்தலில் வென்ற கட்சி ஆட்சி அமைக்கும், பதவியேற்புவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
‘பதவி’ என்ற சொல், ‘பதம்’/’பதி’ என்ற சொல்லிலிருந்து வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். ஒரு பதத்தை/நிலைமையை எட்டுதல் அல்லது, ஒரு நிலையில் பதிந்திருத்தல்.
‘பிறந்து நீஉடைப் பிரிவுஇல் தொல்பதம்’ என்று கம்பராமாயணத்தில் பரதன் ராமனிடம் சொல்வான். அதாவது, ‘அரசனின் மகனாகப் பிறந்து, அதன்மூலம் நீ இந்தப் பழைமையான (அரச)பதவிக்கு உரிமை பெற்றாய்’ என்கிறான்.
அன்றைக்குப் பதவி என்பது பிறப்பினால் வந்தது, இன்றைக்கு மக்கள் தரும் வாக்குகளால் வருகிறது, மற்றபடி சொல் ஒன்றேதான்.
பதவியை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வைப் ‘பதவியேற்பு’ என்கிறோம். பதவி+ஏற்பு, இடையில் ‘ய’கரம் எப்படி வந்தது?
உயிர்மெய்யில் ஒரு சொல் முடிந்து, அடுத்த சொல் உயிரெழுத்தில் தொடங்கினால், அவற்றை இணைப்பதற்காக ஒரு மெய்யெழுத்து அங்கே தோன்றும். இதனை ‘உடம்படுமெய்’ என்பார்கள்.
உதாரணமாக, கோ+இல் என்ற சொற்கள் இணையும்போது, முதல் சொல் உயிர்மெய்(கோ)யில் முடிகிறது, இரண்டாவது சொல் உயிரெழுத்தில்(இ) தொடங்குகிறது. ஆகவே, இடையில் ‘வ்’ தோன்றி, கோ+வ்+இல், கோவில் என ஆகிறது.
அதுபோல, பதவி+ஏற்பு எனும் சொற்களில் முதல் சொல் உயிர்மெய்(வி)யில் முடிகிறது, இரண்டாவது சொல் உயிரெழுத்தில்(ஏ) தொடங்குகிறது. ஆகவே, இடையில் ‘ய்’ தோன்றி, பதவி+ய்+ஏற்பு, பதவியேற்பு என ஆகிறது.
அங்கே வ், இங்கே ய், ஏன்? இதையும் பதவிவேற்பு என்று எழுதக்கூடாதா?
கூடாது. முதல் சொல்லின் நிறைவில் இ, ஈ, ஐ குடும்ப எழுத்துகள் வந்தால் இடையில் ‘ய்’ வரும், மற்ற உயிரெழுத்துகளுக்கு ‘வ்’ வரும். ஏ வந்தால் ‘ய்’யும் வரலாம், ‘வ்’வும் வரலாம்.
ஆகவே, ‘கோ’ என்பது ‘ஓ’ என முடிவதால், ‘வ்’ வந்தது, ‘பதவி’ என்பது ‘இ’ என முடிவதால், ‘ய்’ வந்தது, இதுபோல் வாழை+இலை=வாழையிலை, ஆனால் மா+இலை=மாவிலை!
எங்கே ய் வரும், எங்கே வ் வரும் என்பதை மனப்பாடம் செய்யவேண்டியதில்லை, முந்தைய தலைமுறையில் தமிழ் எழுத்துகளைச் சொல்லிப் படித்தவர்கள் இதை எளிதில் நினைவில் கொள்ளலாம், அங்கே நெடில் எழுத்துகளைச் சொல்லும்போது எங்கே ய வருகிறது எங்கே வ வருகிறது என்று கவனியுங்கள்: ஆனா, ஆவன்னா, ஈனா, ஈயன்னா, ஊனா, ஊவன்னா, ஏனா, ஏயன்னா (அல்லது ஏவன்னா), ஐயன்னா, ஓனா, ஓவன்னா, ஔவன்னா.
(தொடரும்)